

உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை பணிகள் தொடர்பாக செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நேற்று உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தலைமையில் செங்கல்பட்டில் நடைபெற்றது.
இதில் ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் முகமது நசிமுத்தின், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் இராஜாராம், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் ஆர்.ஆனந்தகுமார், செங்கல்பட்டு ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆய்வு கூட்டத்துக்கு பின் அமைச்சர் சக்கரபாணி கூறியதாவது:
15 நாட்களுக்குள் புதிய ரேஷன் கார்டு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதிய ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பித்து ஏற்கெனவே நிலுவையில் உள்ள மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் நடமாடும் ரேஷன் கடைகள் திறக்கப்பட்டன. நடமாடும் ரேஷன் கடை தேவையில்லை என்றும் பகுதிநேர கடைகள் தொடங்கப்பட வேண்டும் எனவும் மக்கள் பிரதிநிதிகள் பலர் கோரிக்கை வைத்துள்ளனர். அதன் அடிப்படையில் நடமாடும் ரேஷன் கடைகளுக்கு பதிலாக பகுதிநேர ரேஷன் கடைகள் தொடங்கப்படும்.
காஞ்சி, செங்கை மாவட்டங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார்டுதாரர்கள் உள்ள 192 ரேஷன் கடைகளை பிரித்து புதிய கடை தொடங்கப்படும் என்றார்.
பின்னர் செங்கல்பட்டு அருகே ஆலப்பாக்கத்தில் உள்ள ரேஷன் கடை, திம்மாவரத்தில் உள்ள நெல் சேமிப்பு கிடங்கு, ஆத்தூரில் உள்ள கூட்டுறவு சங்கம் ஆகியவற்றை ஆய்வு செய்து, அங்கு 7 பேருக்கு ரூ.8 லட்சத்து 30 ஆயிரம் பயிர் கடனை அமைச்சர் வழங்கினார்.