

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் திமுகவுடன் கூட்டணியை உறுதி செய்யும் வகையில் திமுக தலைவர் கருணாநிதியை காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் விரைவில் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து திமுக மூத்த தலைவர் ஒருவர் 'தி இந்து' (ஆங்கில) நாளிதழிடம் கூறும்போது, "இம்மாத இறுதியில் தேர்தல் ஆணையம் தமிழக தேர்தல் தேதி தொடர்பான அறிவிக்கையை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுவதால், கூட்டணி குறித்து எங்களுடன் பேச காங்கிரஸ் விருப்பம் தெரிவித்துள்ளது.
கூட்டணி தொடர்பாக பேசுவதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தமிழகம் வரவிருக்கிறார். அவர் தமிழகம் வரும் தேதி உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், வரும் 15-ம் தேதி அவர் இங்கு வர அதிக வாய்ப்புள்ளது.
இப்போதைக்கு திமுக - காங்கிரஸ் கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இருப்பினும் தொகுதி உடன்பாடு குறித்து இதுவரை எதுவும் பேசவில்லை.
தேமுதிக தனது கூட்டணி முடிவை இன்னும் தெரிவிக்காததால் தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை இப்போதைக்கு நடைபெறாது" என்றார்.