

தமிழகத்தில் யூக்கலிப்டஸ் காடுகள் அழிக்கப்பட வேண்டியவையே என ஓய்வு பெற்ற தாவரவியல் துறை பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
சுற்றுச் சூழலுக்கு கேடு விளை விக்கக் கூடியது என நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.
இதேபோன்று, சூழலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய, தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் உள்ள யூக்கலிப்டஸ் காடுகளையும் அழிக்க வேண்டும் என்ற கோரிக்கை சூழலியல் ஆர்வலர்களிடையே மேலோங்கி உள்ளது.
இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுமாறு தமிழக அரசிடமும், மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதனிடமும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், யூக்கலிப்டஸ் மரங்களின் தன்மை குறித்து ஓய்வுபெற்ற தாவரவியல் துறை பேராசிரியர் எஸ்.பழனியப்பன், ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது:
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த யூக்கலிப்டஸ் தாவரமானது 17-ம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. நீலகிரி, கொடைக்கானல் போன்ற மலை பிரதேசங்களில் நீலகிரி தைலம் எனும் மருந்து தயாரிப்புக்காக அறிமுகப்படுத்தப்பட்டது.
இவை, வறட்சியைத் தாங்கி வளரக்கூடியதாக இருப்பதால் சமவெளிப் பகுதியில் சமூகக்காடுகளாக பராமரிக்கப்படுகின்றன. இவ்வாறு, மருத்துவம், விறகு, மண் அரிப்பை தடுத்தல், பொருளாதாரத்தை ஈட்டுதல் ஆகிய நன்மைகளை நோக்கும்போது இது வரமாக அமையலாம்.
அதேசமயம், யூக்கலிப்டஸ் மரங்களில் இருந்து விழும் இலைகள், மரப்பட்டைகள் மட்கி அதிலிருந்தும், வேர்களில் இருந்தும் வெளியேறும் ஃபீனாலிக் அமிலங்கள் மற்றும் எளிதில் ஆவியாகும் எண்ணெய்கள் உயிர்வேதி தடைப்பொருட்களாக வெளிப்படுவதாலும், உயிர்ப்பன்மயம் குறைவதாலும் யூக்கலிப்டஸ் மரங்கள் வளரும் பகுதியில் வட்டார தாவரங்களின் விதைகள் முளைப்பது தடுக்கப்படுகிறது. முளைத்தாலும் நாற்றுப் பருவத்திலேயே அழிகிறது.
மேலும், யூக்கலிப்டஸ் காட்டில் டெர்மைட்டுகள் எனும் கரையான்கள் அதிகமாக உற்பத்தியாகி, அருகில் உள்ள விளை நிலங்களை பாதிக்கச் செய்கிறது. அத்துடன், செயற்கையான வறட்சியை ஏற்படுத்துவதால் படிப்படியாக மழை அளவு குறைந்து வருகிறது. எனவே, இத்தாவரத்தை நாம் வாங்கி வந்த சாபமாகவே கருத முடிகிறது.
ஏழைகளின் விறகுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட சீமைக்கருவேல மரங்கள், நீர் நிலைகளில் களைத் தாவரமாக உள்ள ஆகாயத் தாமரை போன்றவற்றை அழிப்பதைப் போன்று யூக்கலிப்டஸூம் அழிக்க வேண்டியவையே என்றார்.