

பதுக்கி வைத்துள்ள கள்ளத் துப்பாக்கியை, யாருக்கும் தெரியாமல் போட்டுவிட்டால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்ற அறிவிப்பை ஏற்று, சேலம் அருகே மலை கிராம மக்கள் 20 கள்ளத் துப்பாக்கிகளை ஊரின் புதர் ஒன்றில் போட்டுச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில், மலை கிராமங்கள், வனம் சார்ந்த பகுதிகளில் மக்கள் கள்ளத் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி வருவது வனத்துறை மற்றும் போலீஸாரின் கவனத்துக்கு வந்தது. இதையடுத்து, போலீஸாரும், வனத்துறையினரும் தனித்தனியாகவும், கூட்டு சேர்ந்தும், கள்ளத் துப்பாக்கிகளைப் பதுக்கி வைத்திருப்பவர்களைக் கண்டறிந்து, அவர்களிடம் இருந்து கள்ளத் துப்பாக்கிகளைப் பறிமுதல் செய்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சேலத்தை அடுத்த டேனிஷ்பேட்டை வனச்சரகம் நிர்வாக எல்லைக்கு உட்பட்ட கண்ணப்பாடி மலை கிராமத்தில் கள்ளத் துப்பாக்கிகள் புழக்கம் இருப்பதாக வனத்துறையினருக்குத் தெரியவந்தது. இதையடுத்து, சேலம் மாவட்ட வன அலுவலர் முருகன், மாவட்ட எஸ்.பி. ஸ்ரீ அபிநவ் ஆகியோரின் உத்தரவின் பேரில், கடந்த 24-ம் தேதியன்று டேனிஷ்பேட்டை வனச்சரக அலுவலர் பரசுராம மூர்த்தி தலைமையில் வனத்துறை குழுவினர், தீவட்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் பிரபாவதி தலைமையிலான போலீஸாருடன் இணைந்து, கண்ணப்பாடி கிராமத்தில் விழிப்புணர்வுக் கூட்டம் நடத்தினர்.
அப்போது, கள்ளத் துப்பாக்கிகள் வைத்திருப்பவர்கள், ஊரில் உள்ள ஒரு பொது இடத்தில் துப்பாக்கியை வைத்துவிட்டால், அவர்கள் மீது வனத்துறை மூலமாகவோ, காவல்துறை மூலமாகவோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதன் விளைவாக, இரண்டு நாள் அவகாசத்தில் கண்ணப்பாடி கிராமத்தில் உள்ள கோயில் அருகே கள்ளத் துப்பாக்கிகள் ஏராளமான எண்ணிக்கையில் போடப்பட்டிருப்பதாக வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
உடனடியாக டேனிஷ்பேட்டை வனச்சரக அலுவலர் பரசுராம மூர்த்தி தலைமையிலான குழுவினரும், தீவட்டிப்பட்டி போலீஸாரும் இணைந்து, கண்ணப்பாடி கிராமத்துக்குச் சென்றனர். அங்கு மாரியம்மன் கோவில் பின்புறம் உள்ள புதருக்குள் 20 கள்ளத் துப்பாக்கிகள் வீசப்பட்டுக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, ஊர் பொதுமக்கள் முன்னிலையில் வனத்துறையினரும் போலீஸாரும் புதருக்குள் வீசப்பட்டிருந்த 20 கள்ளத் துப்பாக்கிகளைச் சேகரித்தனர்.
அவற்றில் 25 ஆண்டு பழமையான துப்பாக்கிகள் சிலவும் இருந்தது தெரியவந்தது. வேட்டைக்குப் பயன்படுத்தக் கூடிய, நாட்டுத் துப்பாக்கி வகையைச் சேர்ந்த 20 கள்ளத் துப்பாக்கிகளும் பின்னர், தீவட்டிப்பட்டி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.
வனத்துறையினர் மற்றும் போலீஸாரின் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு, மலை கிராம மக்கள், கள்ளத் துப்பாக்கிகளைப் போட்டுவிட்டுச் சென்றாலும், அவர்களிடையே இவ்வளவு கள்ளத் துப்பாக்கி புழக்கத்தில் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலை கிராமத்தில் வீடு வீடாகப் புகுந்து தேடினாலும், புதர்கள் நிறைந்த பகுதியில் எங்காவது மறைத்து வைத்துவிட்டால், கண்டுபிடிக்க முடியாத கள்ளத் துப்பாக்கிகளை, பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து துப்பாக்கியை ஒப்படைத்துள்ளனர். இதனால், வனத்துறையினரும் போலீஸாரும் நிம்மதியடைந்துள்ளனர்.