Published : 27 Jul 2021 06:05 PM
Last Updated : 27 Jul 2021 06:05 PM

அரசியல் கட்சியினர் ரகளையால் பதற்றம்: மதுரையில் மாநகராட்சி ஏலம் திடீர் ரத்து

மதுரை

மதுரை மாநகராட்சியில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருவாய் இனங்கள் ஏலம் விடப்படும். இந்த அடிப்படையில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு மாநகராட்சி மார்க்கெட்டுகள், வாரச்சந்தைகள், இருச்சக்கர வாகன காப்பகங்கள் உள்ளிட்ட பல கோடி மதிப்புள்ள குத்தகை இனங்களுக்கான ஒப்பந்தங்கள் ஏலம் விடப்பட்டன.

இந்த ஏலம், மாநகராட்சி அருகே உள்ள மடீட்சியா ஹாலில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. மொத்தம் 67 குத்தகை இனங்கள் ஏலம் விட இருந்தது. நீதிமன்ற வழக்கால் 4 குத்தகை இனங்கள் ஏலம் விடப்படவில்லை.

14 குத்தகை இனங்களுக்கு யாரும் விண்ணப்பிக்கவில். அதனால், மீதியுள்ள 49 குத்தகை இனங்களுக்கு இன்று ஏலம் விடப்பட்டன.

இதற்கு 163 பேர் விண்ணப்பித்து ஏலம் எடுக்க வந்திருந்தனர். அப்போது திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிக்காரர்ரகள், ஒப்பந்ததாரர்கள் ஏலம் நடந்த மாநகராட்சி சாலையில் குவிந்திருந்தனர்.

அவர்கள், ஏலம் முறையாக நடக்கவில்லை என்றும், ஏலத்திற்கான விண்ணப்பம் கிடைக்கவில்லை என்றும் ரகளையில் ஈடுபட்டதால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.

அதனால், சட்டம், ஓழுங்கு பிரச்சினை ஏற்படும் வாய்ப்பு உருவானதால் மாநகராட்சி ஆணையாளர் கே.பி.கார்த்திகேயன், ஏலத்தை ரத்து செய்து அறிவித்தார். அதனால், ஏலம் எடுக்க வந்தவர்கள் ஏமாற்றமடைந்தனர்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் கே.பி.கார்த்திகேயனிடம் கேட்டபோது, "14 குத்தகை இனங்களுக்கு ஏலம் எடுக்க யாரும் விண்ணப்பிக்கவில்லை. மேலும், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இதுபோல் நடந்த ஏலத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு அடிதடி ஏற்பட்டது.

அதுபோன்ற அசாதாரண நிலைமை இருப்பதாக போலீஸார் தரப்பில் எங்களுக்கு அறிக்கை வழங்கினர். அதனால், சட்டம், ஓழுங்கு பிரச்சினையை தவிர்க்கவே ஏலம் ரத்து செய்யப்பட்டது. மீண்டும் ஒரு தேதி நிர்ணயித்து போதிய முன் ஏற்பாட்டோடு ஏலம் விடப்படும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x