கரோனா தடுப்பூசி ; ஓசூர் மலை கிராமங்களில் வீடு வீடாகச் சென்று ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மா.சு.

கரோனா தடுப்பூசி ; ஓசூர் மலை கிராமங்களில் வீடு வீடாகச் சென்று ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மா.சு.
Updated on
2 min read

ஓசூர் மலைகிராமங்களில் வீடு வீடாகச் சென்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கரோனா தடுப்பூசி குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

தேன்கனிக்கோட்டை வட்டம் கெலமங்கலம் ஒன்றியத்தில் உள்ள பெட்டமுகுளாலம் ஊராட்சி கொடக்கரை, காமகிரி மற்றும் மூக்கன்கரை ஆகிய மலைகிராமங்களில் மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில், எம்எல்ஏக்கள் ஓசூர் ஒய்.பிரகாஷ், பர்கூர் மதியழகன், தளி ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு மலைவாழ் மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

’’தமிழ்நாட்டில் இதுவரை 33 மாவட்டங்களில் பயணம் செய்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அவற்றை உடனடியாக நிறைவேற்றும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து 34-வது மாவட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்துத் துறை அலுவலர்களுடன் கரோனா நோய்த் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கெலமங்கலம் ஒன்றியம் பெட்டமுகுளாலம் ஊராட்சியில் உள்ள கொடகரை பகுதியில் வசித்து வரும் மலைவாழ் மக்களிடம் குறைகள் மற்றும் மருத்துவ வசதிகள் குறித்து கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த மலைவாழ் மக்களுக்கு ஆரம்ப சுகாதார நிலைய வசதி, 108 ஆம்புலன்ஸ் வசதி, புதிய வீடு வசதி, பேருந்து வசதி, மின்சார வசதி, பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமனம் செய்வது உள்ளிட்ட வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும் என மலைவாழ் மக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்தக் கோரிக்கைகளில் கொடகரை மற்றும் காமகிரி கிராமங்களுக்கு அவசர சிகிச்சைகளுக்கு அழைத்துச் செல்ல 108 ஆம்புலன்ஸ் வசதியைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவும், இப்பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கவும் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். காமகிரி கிராமத்தில் குழந்தைத் திருமணங்களைத் தடுப்பது குறித்து நாடகக் கலைஞர்கள் மூலம் மலைவாழ் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இந்நிகழ்ச்சியின் மூலம் குழந்தைத் திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள், குழந்தைத் திருமணம் நடைபெற உறுதுணையாக இருப்பவர்களுக்கான தண்டனை, குழந்தைத் திருமணம் செய்து கொண்ட பெண்களுக்கு, அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், பெண் கல்வியின் முக்கியத்துவம், தமிழ்நாடு முதல்வர் பெண்களுக்கென அறிவித்த சிறப்புத் திட்டங்கள் மற்றும் அரசின் மூலம் பெண்களுக்கு வழங்கப்படும் சிறப்புச் சலுகைகள் போன்ற பல்வேறு சிறப்பான திட்டங்கள் குறித்து நாடகக் கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது’’.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தொடர்ந்து பெட்டமுகுளாலம் ஊராட்சியில் உள்ள மூக்கன்கரை உள்ளிட்ட மலைகிராமங்களில் வீடு வீடாக சென்ற அமைச்சர், அங்கு வசிக்கும் மலைவாழ் மக்களிடையே கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரங்களைக் கேட்டறிந்தார். மேலும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் அவசியம் குறித்து மலைவாழ் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின்பு மூக்கன்கரை கிராமத்திலிருந்து சுமார் 15 கி.மீ. தூரம் கொண்ட அடர்ந்த வனப்பகுதி வழியாக தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி பகுதிக்கு நடைப்பயணமாகப் புறப்பட்டுச் சென்றார்.

இந்த நிகழ்வுகளில் தேசிய நல்வாழ்வுக் குழும இயக்குநர் தாரேஸ் அகமது, மாவட்ட வன அலுவலர் பிரபு, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை இயக்குநர் செல்வவிநாயகம், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் குருநாதன், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, திட்ட இயக்குநர் பெரியசாமி, ஓசூர் உதவி ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா மற்றும் பலர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in