Published : 27 Jul 2021 05:25 PM
Last Updated : 27 Jul 2021 05:25 PM

மதுரையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஸ்மார்ட் போக்குவரத்து மேலாண்மை திட்டம்: மாநகராட்சி மேற்பார்வையில் 2 நிறுவனங்கள் ஆய்வு தொடக்கம்

மதுரையில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம் செயல்படுத்தப்படும் நிலையில் நீண்ட கால போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் உலக வங்கி உதவியுடன் ஸ்மார்ட் நுண்ணறிவு போக்குவரத்து மேலாண்மை திட்டம் (Intelligent Traffic Management System) செயல்படுத்தப்படுகிறது.

மாநகராட்சி மேற்பார்வையில் இரு தனியார் நிறுவனங்கள், இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆய்வை தொடங்கியிருக்கின்றன.

மதுரையில், கடந்த கால் நூற்றாண்டில் மதுரையில் வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு பெருகிவிட்டன. ஆனால் அதற்கான சாலைகள் வசதிகள் மற்றும் போக்குவரத்து கட்டமைப்பு திறன்கள் இன்னும் வளர்ச்சியடையவில்லை.

அதனால், குறுகலான சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல், சாலை விபத்துக்கள், மாசு அளவு அதிகரித்துவிட்டன.

மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தையும் போக்குவரத்து நெரிசல் பாதிக்கிறது. தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தினாலும் தீராத போக்குவரத்து நெரிசல், விசாலமான சாலை வசதியில்லாததாலேயே மதுரை சென்னை, கோவையை விட 10 ஆண்டுகள் பின்தங்கியிருக்கிறது.

அதனால், மதுரை மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சியும் இணைந்து, போக்குவரத்து காவல்துறை உதவியுடன் நகரின் போக்குவரத்து தொடர்பான சிக்கல்களைத் தீர்ப்பதற்காக ஸ்மார்ட் நுண்ணறிவு போக்குவரத்து மேலாண்மை அமைப்பு (Intelligent Traffic Management System) என்ற திட்டத்தை உருவாக்க முடிவு செய்திருக்கிறது.

இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக மதுரை மாநகரில் எந்தெந்த இடங்களில் தானியங்கி சிக்னல்கள் அமைக்கலாம். பாதசாரிகள் நடைபாதைகளை அமைக்கலாம் என்பது குறித்தும், விபத்துகள், உயிரிழப்புகள், போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் இடங்களை கண்டறிவதற்கான ஆய்வை மேற்கொள்ளும் பொறுப்பு tata consultancy மற்றும் urban transit company system limited ஆகிய நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அவர்கள், மதுரையில் போக்குவரத்து நெரிசலை தீர்ப்பதற்கான ஆய்வுகளை தொடங்கிவிட்டனர். அவர்கள், வரும் டிசம்பருக்குள் ஆய்வு முடிவை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர், மாநகராட்சி ஆணையாளர் கேபி.கார்த்திகேயனிடம் ஒப்படைப்பார்கள்.

அதன் அடிப்படையில் மதுரை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் இணைந்து உலக வங்கி நிதியுதவியுடன் மதுரையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கான இந்தத் திட்டத்தை செயல்படுத்த இருக்கிறது

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் கே.பி.கார்த்திகேயன் கூறியதாவது:

மீனாட்சியம்மன் கோயிலை மையமாகக் கொண்ட மதுரை மாநகராட்சி ஒரு பாரம்பரிய ஆன்மிக நகரமாக திகழ்வதால் தற்போதைய போக்குவரத்து, வாகனங்கள் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு சாலைகளை விரிவுப்படுத்த முடியவில்லை.

அதுவே நகர வளர்ச்சிக்கும், போக்கவரத்து நெரிசலுக்கும் பெரும் சிக்கலை ஏற்படுத்துகிறது. அதனால், சாலைகளில் நினைத்த இடத்தில் மக்கள் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்தை தடை செய்யாமல் இருக்க பார்க்கிங் பகுதிகளை முறைப்படுத்துவது, கூடுதல் மல்டி லெவல் பார்க்கிங் வசதிகளை அமைப்பது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அவசர சேவைகளுக்கு ஆம்புலன்ஸ்களை உடனடியாக அழைப்பது, அவற்றை சாலைகளில் தடை செய்யாதிருப்பது, சாலைகளில் விதிகளை மீறும் வாகனங்களை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் பயன்படுத்துவது, நகர சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு வேககட்டுப்பாடு நிர்ணயிப்பது, பாத சாரி நடைபாதைகள் அமைப்பது, போக்குவரத்து அதிகமுள்ள சாலைகளை கண்டறிந்து நெரிசல் ஏற்படாமல் கண்காணிப்பது, போக்குவரத்து ஒழுங்குப்படுத்துவதை டிஜிட்டல் ஆக்கம் போன்றவை இந்தத் திட்டத்தில் இடம்பெறுகிறது.

ஆண்டு முழுவதும் நெரிசல் மிகுந்த வணிக நிறுவனங்கள் அதிகம் உள்ள மாசி வீதிகளில் வாகனங்களை பார்க்கிங் செய்வதை முறைப்படுத்தப்பட உள்ளன.

இதுதொடர்பாக ஆட்சியர் அனீஸ்சேகர், நானும் (மாநகராட்சி ஆணையர்) போக்குவரத்து போலீஸார், லாரி உரிமையாளர்கள், பஸ்வ்உரிமையாளர்கள் உள்ளிட்டோரிடம் ஆலோசனை மேற்கொண்டு அவர்கள் ஆலோசனைகளை பெற்றோம். டிசம்பரில் ஆய்வு மேற்கொள்ளும் நிறுவனங்கள் அறிக்கை வழங்கியப்பிறகு நிதி ஒதுக்கீடு பெற்று நுண்ணறிவு போக்குவரத்து மேலாண்மை அமைப்பு மதுரையில் ஏற்படுத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x