

மேட்டூர் அணையின் நீர்வரத்து விநாடிக்கு 34 ஆயிரத்து 141 கன அடியாக அதிகரித்துக் காணப்படும் நிலையில், டெல்டா பாசனத்துக்கான நீர் திறப்பு விநாடிக்கு 10 ஆயிரம் கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் 2 நாட்களில் அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்துள்ளது.
கர்நாடகா அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்பட்டுள்ள உபரி நீர் காரணமாக, மேட்டூர் அணைக்குக் கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு நேற்று விநாடிக்கு 34 ஆயிரத்து 144 கன அடி நீர் வந்த நிலையில், இன்று விநாடிக்கு 34 ஆயிரத்து 141 கன அடி அளவுக்கு நீர் வந்து கொண்டுள்ளது.
இந்நிலையில், டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து நேற்று மாலை வரை விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டு வந்தது. தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் உள்பட பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இதனால், டெல்டா பாசனத்துக்கான மேட்டூர் நீர் திறப்பு நேற்று இரவு 10 மணியளவில், விநாடிக்கு 10 ஆயிரம் கன அடியாகக் குறைக்கப்பட்டது.
நீர் திறப்பு குறைந்திருப்பதாலும், நீர் வரத்து அதிகரித்துள்ளதாலும், மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்று 75.34 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 77.43 அடியாக உயர்ந்தது. அணையின் நீர் இருப்பு நேற்று 37.47 டிஎம்சியாக இருந்த நிலையில், இன்று 39.44 டிஎம்சியாக அதிகரித்திருந்தது.
காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கினால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த 2 நாட்களில் 4 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.