

கரோனா எதிரொலியால் கடந்த 16 மாதங்களாக முடக்கி வைக்கப்பட்டுள்ள விழுப்புரம் - திருப்பதி, விழுப்புரம் - காட்பாடி இடையேயான பாசஞ்சர் ரயில்களின் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என ரயில் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
திருப்பதியில் இருந்து திருவண்ணாமலை வழியாக விழுப்புரத்துக்கு 2 பாசஞ்சர் ரயில்களும், காட்பாடியில் இருந்து விழுப்புரத்துக்கு ஒரு பாசஞ்சர் ரயிலும் தினசரி இயக்கப்பட்டன. திருப்பதியில் இருந்து புதுச்சேரி, மன்னார்குடி மற்றும் ராமேசுவரத்துக்கு வாராந்திர விரைவு ரயில்கள் இயங்கின. அதேபோல், திருவண்ணாமலை வழியாக விழுப்புரத்தில் இருந்து கோரக்பூர், புருலியா அதிவிரைவு ரயில்களும், புதுச்சேரியில் இருந்து ஹவுரா, மும்பை தாதர் வரை வாராந்திர விரைவு ரயில்களும் இயக்கப்பட்டன.
திருவண்ணாமலை வழியாக இயக்கப்பட்ட 3 பாசஞ்சர் ரயில்கள், 5 விரைவு ரயில்கள் மற்றும் 2 அதிவிரைவு ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. ரயில்வே நிர்வாகமும் லாபம் ஈட்டியதால், ரயில் சேவை தொடர்ந்தது. இதன்மூலம் அரசு மற்றும் தனியார் பணிக்குச் செல்பவர்கள், விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்கள் மற்றும் பக்தர்கள் உள்ளிட்டோர் அதிக அளவில் பயனடைந்தனர். வெகுஜன மக்களுக்கு எளிதாக இருந்த ரயில் சேவையானது, கரோனா தாக்குதலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கரோனா ஊரடங்கால், திருவண்ணாமலை வழியாக இயக்கப்பட்டு வந்த ரயில்களின் சேவையானது முற்றிலும் நிறுத்தப்பட்டது. பின்னர், மத்திய, மாநில அரசுகள் தளர்வுகளை ஏற்படுத்தியதால், சிறப்பு ரயில்களைப் படிப்படியாகத் தென்னக ரயில்வே இயக்கியது. விழுப்புரத்தில் இருந்து கோரக்பூர், புருலியா, திருப்பதியில் இருந்து மன்னார்குடி, ராமேசுவரம் மற்றும் புதுச்சேரியில் இருந்து ஹவுரா, மும்பை தாதர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
அதே நேரத்தில், விழுப்புரத்தில் இருந்து திருப்பதிக்கு தினசரி இயக்கப்பட்ட 2 பாசஞ்சர் ரயில்கள், விழுப்புரத்தில் இருந்து காட்பாடிக்கு தினசரி இயக்கப்பட்ட ஒரு பாசஞ்சர் ரயில் மற்றும் புதுச்சேரியில் இருந்து திருப்பதிக்கு ஞாயிற்றுக்கிழமையில் மட்டும் இயக்கப்பட்ட விரைவு ரயில் நிறுத்தப்பட்டது. கரோனா எதிரொலியாக ஏப்ரல் 2020-ல் முடக்கப்பட்ட 4 ரயில்களின் சேவையும் மீண்டும் தொடங்கவில்லை. இதற்கு மாற்றாக விழுப்புரத்தில் இருந்து திருப்பதிக்கு, சிறப்பு ரயில் என்ற பெயரில் தினசரி ஒரு விரைவு ரயில் மட்டும் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் பயணிக்க முன்பதிவு அவசியம் என்பதால் மக்களிடம் போதிய வரவேற்பைப் பெறவில்லை.
இந்த நிலையில் கரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு, அனைத்து வகையான பொதுப் போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில் சேவையும் தொடங்கப்பட்டுவிட்டது. அந்த வரிசையில், திருவண்ணாமலை வழியாக இயக்கப்பட்டு வந்த பாசஞ்சர் ரயில்கள் மற்றும் ஒரு விரைவு ரயிலின் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என ரயில் பயணிகள் உட்பட அனைத்துத் தரப்பு மக்களும் வலியுறுத்தி உள்ளனர்.
முன்பதிவு இல்லாத பயணம்
மேலும் அவர்கள் கூறும்போது, “தமிழகத்தில் பொதுப் போக்குவரத்து தடையின்றிச் செயல்படுகிறது. இதனால், கடந்த 16 மாதங்களாகக் முடங்கிக் கிடக்கும் விழுப்புரம்- திருப்பதி மற்றும் காட்பாடி இடையேயான பாசஞ்சர் ரயில்கள் மற்றும் புதுச்சேரி - திருப்பதி இடையேயான வாராந்திர விரைவு ரயிலைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். திருப்பதி வரை இயக்கவில்லை என்றாலும், முதற்கட்டமாகக் காட்பாடி வரை இயக்க வேண்டும்.
மேலும், விழுப்புரத்தில் இருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயிலில் முன்பதிவு இல்லாதவர்களும் பயணம் செய்யும் வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இது தொடர்பாகத் தமிழக அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தென்னக ரயில்வே மற்றும் ரயில்வே அமைச்சகத்திடம் வலியுறுத்தி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டனர்.