ஆட்சிக் கவிழ்ப்பின்போது எனது செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டிருக்கலாம்: நாராயணசாமி சந்தேகம்

ஆட்சிக் கவிழ்ப்பின்போது எனது செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டிருக்கலாம்: நாராயணசாமி சந்தேகம்
Updated on
1 min read

ஆட்சிக் கவிழ்ப்பின்போது எனது செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டிருக்கலாம் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி சந்தேகம் தெரிவித்துள்ளார்.

புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:

“பிரதமர் மோடி தலைமையிலான அரசு மிகப்பெரிய விலை கொடுத்து, இஸ்ரேல் மென்பொருளை வாங்கி நமது நாட்டில் பலரின் மொபைல் போன் பேச்சை ஒட்டுக் கேட்டுள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, முன்னாள் சிபிஐ இயக்குநர் உட்பட அதிகாரிகள், அரசியில்வாதிகளின் மொபைல் போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்ட தகவல் நாட்டை உலுக்கியுள்ளது. இப்பிரச்சினை நாடாளுமன்றத்திலும் வெடித்துள்ளது. நிலைக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

6 நாட்கள் நாடாளுமன்றம் முடங்கியுள்ளது. இதுகுறித்து பிரதமர் கவலை கொள்ளவில்லை. இந்த மென்பொருளைப் பயன்படுத்தி பல மாநிலங்களில் மத்திய அரசு ஆட்சியைக் கவிழ்த்துள்ளது. புதுவையில் ஆட்சிக் கவிழ்ப்பு சம்பவத்தில் எனது செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டிருக்கலாம் என சந்தேகப்படுகிறேன். மொபைலில் பேசும்போது எனக்கு சமிக்ஞைகள் தெரிந்தன. வெளிப்படையான விசாரணை நடத்தினால் உண்மை வெளிவரும்".

இவ்வாறு நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in