Published : 27 Jul 2021 12:54 PM
Last Updated : 27 Jul 2021 12:54 PM

தேர்தல் நேரத்தில் சமையல் எரிவாயு மானியத்தைக் கூட்டி தேர்தல் முடிந்தவுடன் கடும் விலை ஏற்றம்: சு.வெங்கடேசன் விமர்சனம்

சமையல் எரிவாயு விலையை இதுவரை 41% உயர்த்தியுள்ளது கொடுமையான ஒன்று, அமெரிக்கா கூட கார்ப்பரேட் வரிகளை உயர்த்தும்போது கூட இங்கு கார்ப்பரேட் வரிகளை உயர்த்தாமல் சாதாரண மக்களின் அடுப்படிக்குள் புகுந்து அபகரிப்பது நியாயமற்றது என சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து சு.வெங்கடேசன் அலுவலகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“மக்களவையில் மார்க்சிஸ்ட் எம்.பி., சு.வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயுத் துறை அமைச்சர் ராமேஸ்வர் தெலி அளித்த பதிலில், சமையல் எரிவாயு மீது மத்திய அரசு அளித்து வந்த மானியம் பெருமளவு குறைக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

சமையல் எரிவாயு மானியம் பெருமளவு குறைக்கப்பட்டு விலை கூடியுள்ளது குறித்து மார்க்சிஸ்ட் எம்.பி., சு. வெங்கடேசன் மக்களவையில் எழுப்பிய கேள்வி:

2016-ல் தொடங்கி 2021 வரை எவ்வளவு பேர் சமையல் எரிவாயு மானியத்தை விட்டுக்கொடுங்கள் என்ற அரசின் வேண்டுகோளுக்கு செவிமடுத்துள்ளார்கள். சமையல் எரிவாயுக்காக எவ்வளவு மானியங்கள் மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளன. மானியக் குறைப்பால், விட்டுக் கொடுத்ததால் அரசுக்கு மிச்சமான தொகை எவ்வளவு என்ற கேள்விகளை சு.வெங்கடேசன் நாடாளுமன்றத்தில் எழுப்பி இருந்தார்.

இதற்கு மத்திய அமைச்சர் அளித்த பதில்:

நாட்டில் மொத்தம் சமையல் எரிவாயு நுகர்வோர் 2021 மார்ச் 21 அன்று 28.95 கோடி பேர் உள்ளனர் என்றும், அவர்களில் 1.08 கோடி பேர் மட்டுமே "மானியத்தை விட்டுக் கொடுங்கள்" என்ற வேண்டுகோளுக்கு செவி மடுத்துள்ளனர் என்றும், மொத்த மானியம் 2016-ல் ரூ.22,029 கோடி, 2017-ல் ரூ.18,337 கோடி, 2018-ல் ரூ.23,464 கோடி, 2019-ல் ரூ. 37,209 கோடி, 2020-ல் ரூ.24,172 கோடி, 2021-ல் ரூ.11,896 கோடி வழங்கப்பட்டுள்ளது என்றும், 2016 - 2021 காலத்திய நிதி ஆண்டுகளில் மானியக் குறைப்பால், விட்டுக் கொடுத்ததால் அரசுக்கு மிச்சமான தொகை ரூ.57,768 கோடி என்றும் அமைச்சர் பதிலில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சு.வெங்கடேசன் தெரிவித்துள்ள கருத்து:

'அமைச்சரின் பதில் சமையல் எரிவாயு விலை ஏற்றத்தின் காரணத்தை அம்பலமாக்குகிறது. நரேந்திர மோடி 2014-ல் பதவி ஏற்றபோது ஒரு சிலிண்டர் விலை ரூ.410.50. இன்றோ ரூ.850-ஐத் தொட்டுவிட்டது. ஏழு ஆண்டுகளில் இரண்டு மடங்கு விலை உயர்வு. கடந்த 10 மாதங்களில் மட்டும் 41 சதவீத விலை உயர்வு. மக்கள் கோவிட் காரணமாக பெரும் பொருளாதார சுமைக்கு ஆளாகி இருக்கும் நிலையில் இவ்வளவு விலை உயர்வை சமையல் எரிவாயு விலையில் ஏற்படுத்தி இருப்பது குரூரமானது.

அமைச்சரின் பதிலைப் பார்த்தால் தேர்தல் ஆண்டு வந்தவுடன் மானியத்தைச் சற்று கூட்டி தேர்தல் முடிந்தவுடன் பெரும் விலை உயர்வைச் செய்திருப்பதும் வெளிப்படையாகத் தெரிகிறது. அமெரிக்கா கூட கார்ப்பரேட் வரிகளை உயர்த்தும் போது கூட இங்கு கார்ப்பரேட் வரிகளை உயர்த்தாமல் சாதாரண மக்களின் அடுப்படிக்குள் புகுந்து அபகரிப்பது நியாயமற்றது' என்று சு. வெங்கடேசன் கருத்து தெரிவித்துள்ளார்''.

இவ்வாறு சு.வெங்கடேசன் அலுவலகச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x