உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் ஓபிஎஸ்-இபிஎஸ் இன்று சந்திப்பு

உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் ஓபிஎஸ்-இபிஎஸ் இன்று சந்திப்பு
Updated on
1 min read

அதிமுக தலைவர்கள் ஓபிஎஸ்-இபிஎஸ் பிரதமர் மோடியை நேற்று சந்தித்த நிலையில், இன்று காலை உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இருவரும் கூட்டாகச் சந்திக்கின்றனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. ஆனால், தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை அதிமுக கூட்டணி பெற முடியவில்லை. 65 இடங்கள் மட்டுமே பெற்ற அதிமுக ஆட்சியை திமுகவிடம் பறிகொடுத்தது.

தேர்தல் நேரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இடையே இருந்த பனிப்போர், வேட்பாளர் தேர்வில் நடந்த குளறுபடி, அமமுக, போட்டி வேட்பாளர்களின் போட்டி போன்றவை காரணமாக தேர்தலில் அதிமுக தோல்வியைத் தழுவியது.

ஒற்றுமையுடன் காணப்படுவதுபோல் தோற்றமளித்தாலும், அதிமுகவுக்குள் யார் பெரியவர் என்கிற போட்டி ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே தொடர்ந்து நடந்து வருகிறது. அதிமுக பொதுச் செயலாளர் பதவி குறித்த சர்ச்சை தொடர்ந்துவரும் நிலையில், சசிகலா திடீரென அதிமுக உள் விவகாரங்கள் குறித்துப் பேசுவது, தொண்டர்கள், நிர்வாகிகளிடையே உரையாடல் நடத்துவது அதிமுக தலைமைக்குச் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான சொத்துக் குவிப்பு புகாரில் வழக்குப் பதிவு செய்துள்ள லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் ரெய்டு நடத்தி ரொக்கப் பணம், ஆவணங்களைக் கைப்பற்றினர். தொடர்ந்து மற்ற அமைச்சர்கள் மீதும் இதேபோன்ற நடவடிக்கை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அதிமுக தலைவர்கள் ஓபிஎஸ்- இபிஎஸ் இருவருக்கும் டெல்லியிலிருந்து அழைப்பு வந்ததாகக் கூறப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் காலை ஓபிஎஸ் டெல்லி சென்றார். நேற்று முன்தினம் இரவு எடப்பாடி பழனிசாமி டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார். நேற்று காலை பிரதமர் நேரம் அளித்த நிலையில் பிரதமரை மக்களவை வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் சந்தித்தனர்.

அவர்களுடன் தம்பிதுரை, எஸ்.பி.வேலுமணி, மனோஜ் பாண்டியன், தளவாய் சுந்தரம், உள்ளிட்டோர் உடன் சென்றனர். ஆனால் ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரை மட்டுமே பிரதமர் தனியாகச் சந்தித்துப் பேசினார். அரை மணி நேரத்திற்கு மேலாக நடந்த இந்தச் சந்திப்பில் தமிழக அரசின் முக்கியக் கோரிக்கைகள் குறித்துப் பேசியதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

பிரதமருடனான சந்திப்பில் தடுப்பூசி, மேகதாது அணை பிரச்சினை, சாலைகள் அமைப்பது, மீனவர்கள் தாக்கப்படுவதற்கு தீர்வு உள்ளிட்ட விஷயங்கள் பேசப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சசிகலா குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்தார். உள்துறை அமைச்சருடன் சந்திப்பு இல்லை, ஒருவேளை வாய்ப்பு கிடைத்தால் சந்திப்போம் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று காலை உள்துறை அமைச்சரைச் சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்ட நிலையில், ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்க உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in