Published : 27 Jul 2021 10:50 AM
Last Updated : 27 Jul 2021 10:50 AM

பொருளாதார வளர்ச்சியில் ஏற்படும் வீழ்ச்சியைத் தடுக்க மத்திய அரசு என்ன செய்துள்ளது?- டி.ஆர்.பாலு கேள்விக்கு நிதியமைச்சர் பதில்

பொருளாதார வளர்ச்சியில் ஏற்படும் வீழ்ச்சியைத் தடுக்க மத்திய அரசு என்னென்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று மக்களவையில், டி.ஆர்.பாலு எம்.பி. எழுப்பிய கேள்விக்கு மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார்.

திமுக பொருளாளரும் அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு, நேற்று (26 ஜூலை, 2021) மக்களவையில், பொருளாதார வளர்ச்சியில் இந்த நிதியாண்டில் (2021-22) எதிர்பார்க்கப்படும் வீழ்ச்சியைத் தடுக்க, மத்திய அரசு என்னென்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது? என்றும், அதிகரித்து வரும் பண வீக்கத்தினால், பொருளாதாரப் பின்னடைவுகள் ஏற்படுவதைக் கட்டுப்படுத்த உரிய முயற்சிகள் மத்திய அரசால் எடுக்கப்பட்டுள்ளனவா? என்றும் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் விரிவான கேள்வியை எழுப்பினார்.

இதற்கு மத்திய நிதித்துறை அமைச்சர் அளித்த பதில்:

''2021- 22ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையின்படி பொருளாதார மொத்த உற்பத்திப் பெருக்கம் சுமார் 14 சதவீத அளவை எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கரோனா கொள்ளை நோய்த்தொற்றின் இரண்டாவது அலையின் காரணமாகவும், இதற்கான மருத்துவச் செலவீனங்களின் காரணமாகவும், சுமார் 9.5 சதவீதம் மொத்த உற்பத்தி பெருக்கத்தை மட்டுமே, இந்தியப் பொருளாதாரம் எட்டிப் பிடிக்க இயலும் என்று, இந்திய ரிசர்வ் வங்கி கடந்த ஜூன் 4, 2021 அன்று அறிவித்துள்ளது.

மேலும், பொருளாதாரத்தை 2020- 21ஆம் ஆண்டில் மேம்படச் செய்யும் வகையில், சுயச் சார்பு இந்தியா திட்டத்தின் கீழ், ரூ.29 லட்சம் கோடிக்கும் மேல், பல்வேறு திட்டங்களுக்காகச் செலவழிக்கப்பட்டது. கடந்த ஜூன் 2021-ல் பொதுச் சுகாதாரத்தை மேம்படுத்தவும், வேலை வாய்ப்புகளுக்காகவும், ரூ.6 லட்சம் கோடிகளுக்கு மேல், திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என்றும், தென்மேற்குப் பருவமழையின் உதவியுடனும், உணவு தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துகள் ஆகியன கையிருப்பில் உள்ளதாலும், பண வீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில், மத்திய அரசு தேவையான முயற்சிகளை எடுத்து வருகிறது''.

இவ்வாறு மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x