Published : 27 Jul 2021 03:13 AM
Last Updated : 27 Jul 2021 03:13 AM

ஒலிம்பிக் வீராங்கனைகள் சுபா வெங்கடேசன், தனலட்சுமிக்கு அரசுப் பணி: அமைச்சர் மெய்யநாதன் தகவல்

சென்னை

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள சுபா வெங்கடேசன் மற்றும் தனலட்சுமி ஆகியோருக்கு, அவர்கள் தமிழகம் திரும்பியதும் அரசுப் பணிக்கான உத்தரவை முதல்வர் ஸ்டாலின் வழங்குவார் என்று அமைச்சர் சிவ.வீ.மெய்ய நாதன் தெரிவித்தார்.

தமிழக விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தில் இருந்து சென்றுள்ள விளையாட்டு வீரர்கள்,வீராங்கனைகளை உற்சாகப்படுத்தும் வகையில் ‘வென்று வா வீரர்களே’ என்ற பாடல் அடிப்படையில் ‘வென்று வா வீரர்களே’ என்ற ஹேஷ்டேக்கை முதல்வர்ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். ஒலிம்பிக்கில் போட்டியில் இந்தியாவில் இருந்து 127 வீரர்கள் பங்கேற்கும் நிலையில், அதில் தமிழகத்தைச் சேர்ந்த 11 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்களுக்கு துணைநிற்கும் வகையில், உலகில் உள்ள 77 நாடுகளைச் சேர்ந்த தமிழர்களை ஒருங்கிணைக்க இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

‘வென்றுவா வீரர்களே’ பாடலுக்கு இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தமிழ்நாடு கூடை பந்தாட்டக்கழகம் இந்தப் பாடலை தயாரித்து அளித்துள்ளது.

அடுத்து வரும் ஒலிம்பிக் போட்டியில் அதிகளவில் வீரர்கள், வீராங்கனைகளை பங்கேற்க வைத்து,குறைந்தபட்சம் 25 பதக்கங்களையாவது பெற வைக்க வேண்டும் என்பதுதான் முதல்வரின் தொலைநோக்குத் திட்டமாகும்.

தமிழகத்தில் 4 மண்டலங்களில் ஒலிம்பிக் அகாடமிகள் அமைத்து6 முதல் 14 வயதுக்குட்பட்டவர்களைத் தேர்வு செய்து உயரிய பயிற்சி அளிக்கப்படும். தேவைப்பட்டால் வெளிநாட்டுக்கு அனுப்பியோ அல்லது வெளிநாட்டு பயிற்சியாளர்களை இங்கு அழைத்து வந்தோ பயிற்சி அளிக்கப்படும்.

மேலும், தற்போது டோக்கியோ சென்றுள்ள 11 பேரில் 9 பேர் அரசு, தனியார் துறைகளில் பணியில் உள்ளனர். மிக வறுமையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்துள்ள சுபா வெங்கடேசன், தனலட்சுமி இருவரும் தாயகம் திரும்பியதும், அவர்களுக்கு அரசுப் பணி நியமனஆணையை முதல்வர் வழங்குவார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x