Published : 27 Jul 2021 03:13 AM
Last Updated : 27 Jul 2021 03:13 AM

முகநூலை தொடர்ந்து மர்ம நபர்கள் கைவரிசை; வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்டு பணம் பறிப்பு: மக்கள் கவனமாக இருக்க சைபர் க்ரைம் போலீஸார் அறிவுரை

சென்னை

வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்டுபணம் பறிக்கும் மோசடியில் மர்மநபர்கள் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு சைபர் க்ரைம் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

தமிழகம் முழுவதிலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல்வேறு காவல் அதிகாரிகள், காவலர்கள் பெயரில் போலியாக முகநூல் கணக்கு தொடங்கி மோசடி நடந்தது. முகநூலில் அவர்கள் பெயரில் போலியாக கணக்கு தொடங்கும் மர்ம நபர்கள், அவசரத்தேவைக்காக பணம் தேவைப்படுவதாக அதில் பதிவிட்டு, பலரிடம் பணத்தை பெற்று மோசடி செய்தனர்.

கூடுதல் டிஜிபி சந்தீப் ரத்தோர், ஐ.ஜி அந்தஸ்தில் உள்ள ஆர்.தினகரன், வி.பாலகிருஷ்ணன், சந்தோஷ் குமார், சென்னை காவல்ஆணையராக இருந்த மகேஷ்குமார் அகர்வால், மாதவரம் காவல்உதவி ஆணையராக இருந்த அருள்சந்தோஷ் முத்து, வண்ணாரப்பேட்டை காவல் உதவி ஆணையர் ஜூலியஸ் சீஸர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் பெயரிலும் இந்த மோசடி நடந்தது.

இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து, ராஜஸ்தான் மாநிலம்பரத்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஷகீல்கான், அவரது கூட்டாளி ரவீந்தர்குமார் ஆகிய 2 பேரை ராஜஸ்தான் சென்று கைது செய்தனர்.

இந்நிலையில், தற்போது வாட்ஸ்அப்பில் இதேபோன்ற மோசடியில் மர்ம நபர்கள் ஈடுபடுவது தெரியவந்துள்ளது.

டிஜிபி அலுவலகத்தில் பணிபுரியும் ஓர் அதிகாரியின் புகைப்படத்தை வாட்ஸ்அப் டி.பி.யாக(டிஸ்பிளே பிக்சர்) வைத்து, அவருக்கு தெரிந்த சில நபர்களைவாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்டுள்ளனர். ‘நண்பருக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது. எனது ‘போன் பே’ பழுதடைந்துள்ளதால், தற்போது தகவல் பரிமாறிக் கொண்டிருக்கும் இந்த செல்போன் எண்ணுக்கு கூகுள் பே மூலம் ரூ.10 ஆயிரம் அனுப்புங்கள். நாளை காலை திருப்பித் தருகிறேன்’ என்று அதில் தகவல் வந்துள்ளது.

அவரது நண்பர்கள், அறிமுகமான நபர்கள் பலருக்கும் இத்தகவலை மர்ம நபர்கள் அனுப்பியுள்ளனர். சந்தேகமடைந்த சிலர், அவரை தொடர்புகொண்டு விவரம் கேட்டுள்ளனர். தன் பெயரில் மோசடி நடப்பதை அறிந்த அவர், உடனே குறுந்தகவல் அனுப்பி நண்பர்களை உஷார்படுத்தினார்.

இந்த மோசடி குறித்து சைபர்க்ரைம் போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இவ்வாறு வரும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்று சைபர் க்ரைம் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x