

கொடுத்த வாக்குறுதியை நிறை வேற்றத் துடிக்கும் அரசியல் வாதியாக மு.க.ஸ்டாலின் திகழ் கிறார் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் மூலம் பெறப்பட்ட மனுக்களின் மீது நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சி யில், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெகத்ரட்சகன் (அரக்கோணம்), கதிர் ஆனந்த் (வேலூர்), சட்டப் பேரவை உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார் (அணைக்கட்டு), கார்த்திகேயன் (வேலூர்), ஈஸ்வரப்பன் (ஆற்காடு), அமலு விஜயன் (குடியாத்தம்) ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று 387 பயனாளிகளுக்கு ரூ.8.94 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வழங்கிப் பேசும் போது, ‘‘தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதி என்பது 100 நாட்களில் மக்களிடம் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்படும்" என்றார். அப்போது பலர் இது எவ்வாறு சாத்தியம் என்று கூறி சிரித்தார்கள். அவர் சொன்னதை செய்வதுபோல் மனுக்கள் மீது இப்போது நடவடிக்கை எடுத்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் 8,785 மனுக்கள் பெறப்பட்டன. இதில், 2,046 மனுக்கள் நிலுவையில் உள்ளன. 2,068 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 3,620 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட் டுள்ளன. தள்ளுபடி செய்யப்பட்ட மனுக்களில் பெரும்பாலானவர்கள் பட்டா கேட்டு அளிக்கப்பட்டது. நீர்நிலைகளில் வீடுகள் கட்டி அதற்கு பட்டா கேட்டால் எவ்வாறு கொடுக்க முடியும்.
நீராதாரங்களில் வீடுகட்டி பட்டா கேட்டால் வழங்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்டாலின் தலைமையிலான அரசு நீராதா ரங்களை பாதுகாக்கும். எனவே, நீர்நிலைகளில் வீடு கட்டியவர் களுக்கு பட்டா கேட்டால் தர முடியாது.
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றத் துடிக்கும் அரசியல்வாதி யாக மு.க. ஸ்டாலின் திகழ்கிறார். இந்தியாவில் எந்த ஒரு முதலமைச் சரும் இவ்வாறு செய்ததில்லை. பிற முதலமைச்சர்களுக்கு படிப்பினையாக அவர் திகழ்கிறார். வட்டாட்சியர் அலுவலகங்களில் இடைத்தரகர்களின் ஆதிக்கத்தை மாவட்ட நிர்வாகம் ஒழிக்க வேண்டும். நிர்வாகம் தொடர்பாக மாவட்ட உயரதிகாரிகள் தனக்குக் கீழுள்ள அதிகாரிகளிடம் கண்டிப் புடனும் கருணையுடனும் இருந் தால்தான் சிறப்பாக செய்ய முடியும்’’ என்றார்.