

மதுரை எய்ம்ஸில் வரும் கல்வியாண்டில் 50 எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை தொடங்குவது தொடர்பாக திட்ட அறிக்கை அளிக்குமாறு எய்ம்ஸ் நிறுவனத்தை தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது என உயர் நீதிமன்றத்தில் சுகாதாரத்துறை செயலர் தெரிவித்தார்.
மதுரை தோப்பூரில் அறிவிக்கப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை தற்காலிக இடத்தில் அமைத்து, அங்கு வெளிநோயாளிகள் பிரிவு மற்றும் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையை தொடங்கவும் உத்தரவிடக்கோரி மதுரையைச் சேர்ந்த பஷ்பவனம் உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், மதுரை எய்ம்ஸ் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் 16.7.2021-ல் நடைபெற்றது.
இதில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது வரும் கல்வியாண்டில் 50 எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையை தொடங்குவது தொடர்பாக திட்ட அறிக்கை அளிக்குமாறு எய்ம்ஸ் நிறுவனத்தைக் கேட்டுக்கொண்டோம்.
அதன்படி எய்ம்ஸ் நிறுவன திட்ட அறிக்கை அளித்தால், எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையை தொடங்குவதற்கு தேவையான இடத்தை கண்டறிந்து எய்ம்ஸ் நிறுவனத்துக்கு அரசு தகவல் தெரிவிக்கும் எனக் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து தமிழக அரசின் பதில் மனு தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 30-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.