

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு இன்று மனு அளிக்க வந்த பொதுமக்கள், சமூக இடைவெளியின்றி நின்றிருப்பதைக் கண்ட மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு அதிருப்தி அடைந்தார். இதையடுத்து, கரோனா பரவல் அபாயத்தை எடுத்துக் கூறி சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்குமாறு பொதுமக்களை அறிவுறுத்தினார்.
பொதுமக்கள் குறைதீர்க்கும் நாளான இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிப்பதற்காக பொதுமக்கள் திரளானோர் வந்திருந்தனர். ஆட்சியர் அலுவலக வளாக பிரதான நுழைவுவாயில் முன் சாலையில் சமூக இடைவெளியின்றி அவர்கள் திரண்டிருந்தனர். அந்த நேரத்தில் ஆட்சியர் சு.சிவராசு அலுவலகத்துக்கு காரில் வந்தார்.
சமூக இடைவெளியின்றி பொதுமக்கள் திரளாக கூடியிருப்பதைக் கண்டு ஆட்சியர் சு.சிவராசு காரில் இருந்து இறங்கினார். அப்போது, அவரிடம் பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்.
அப்போது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்குமாறு பொதுமக்களை ஆட்சியர் அறிவுறுத்தினார். அப்போது அவர் கூறியது:
”கரோனா 3-வது அலை எப்போது வேண்டுமானாலும் பரவும் அபாயம் உள்ளதாக மருத்துவத் துறையினர் எச்சரித்துள்ளனர். கரோனா பரவலைத் தடுக்கவே பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்படாமல், பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை இட்டுச் செல்ல பெட்டி வைக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் தினசரி கரோனா பாதிப்பு நேற்று 3 மடங்கு அதிகரித்து 17,000 ஆகியுள்ளது.
இந்த நிலையில், கோரிக்கை மனு அளிக்க வந்த இடத்தில் பெட்டியில் மனுவை இட்டுச் செல்லாமல் கூட்டமாக நின்று கொண்டிருப்பதால் கரோனா பரவும் அபாயம் உள்ளது. மனு அளிப்பதற்காக வந்து, கரோனா தொற்றை வீட்டுக்கு வாங்கிச் செல்ல வேண்டாம்.
ஆட்சியர் அலுவலக வாயிலில் உள்ள பெட்டியில் மனுவை இட்டுவிட்டோ அல்லது 94454 61756 என்ற வாட்ஸ்ஆப் எண்ணுக்கோ பொதுமக்கள் கோரிக்கை மனுவை அனுப்பலாம். ஒவ்வொரு மனுவும் கணினியில் பதிவு செய்யப்பட்டு, அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, பொதுமக்கள் முகக்கவசம் அணிந்திருப்பதுடன், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்” என்றார்.