

கோவை அரசு மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டவர்களில் 80 சதவீதம் பேர் சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்கள் என மருத்துவனையின் டீன் டாக்டர் நிர்மலா தெரிவித்தார்.
கரோனாவால் பாதிக்கப்பட்டு அதிக நாட்கள் சிகிச்சைபெற்றவர்கள், நோய் எதிர்ப்பு திறன் குறைவாக உள்ளவர்கள், கட்டுப்பாடற்ற சர்க்கரை அளவு உள்ளவர்கள், எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், ரத்தப் புற்றுநோய் உள்ளவர்கள், தீக்காயங்களால் பாதிக்கப்பட்டவர்கள், உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்து கொண்டவர்கள் உள்ளிட்டோருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமுள்ளது. கோவையில் நேற்றுமுன்தினம் வரை 433 பேர் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதம் பேருக்கு மேல் சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதுொடர்பாக மருத்துவமனையின் டீன் டாக்டர் நிர்மலா கூறியதாவது: கோவை அரசு மருத்துவமனையில் தற்போது கருப்பு பூஞ்சை பாதிப்புடன் 111 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 170 பேருக்கு மேல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 80 சதவீதம் பேருக்கு மேல் சர்க்கரைநோய் பாதிப்பு உள்ளவர்கள். கருப்பு பூஞ்சை பாதிப்பை குணப்படுத்த தேவையான 'போசாகொனசோல்', 'ஆம்போடெரிசின்- பி' போன்ற மாத்திரை, மருந்துகள் தேவையான அளவு கையிருப்பில் உள்ளன. மூக்கில் இருந்து ரத்தம் கலந்த சளி வருதல், முகத்தில் வலி, முகத்தில் மரமரப்பு, கண்கள் சிவப்பாக மாறுவது, கண்ணைச் சுற்றி வீக்கம், கண் வலி மற்றும் கண் பார்வை குறைபாடு, தலைவலி, பல்வலி மற்றும் பற்கள் ஆடுவது ஆகிய அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதித்துக்கொள்ள வேண்டும்"என்றார்.