தமிழறிஞர் இளங்குமரனார் உடலுக்கு அணிவிக்கப்பட்ட திருக்குறள் மாலை

தமிழறிஞர் உடலுக்கு அணிவிக்கப்பட்ட திருக்குறள் மாலை.
தமிழறிஞர் உடலுக்கு அணிவிக்கப்பட்ட திருக்குறள் மாலை.
Updated on
1 min read

மூத்த தமிழறிஞர் இரா.இளங்குமரனார் மறைவைத் தொடர்ந்து, மதுரை திருநகர் ராமன் நகரில் உள்ள இல்லத்தில் அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அதிகாலை முதலே பொதுமக்கள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். பெரும்பாலானவர்கள் மலரஞ்சலி செலுத்திய நிலையில், தமிழன்பர் ஒருவர் 1330 திருக்குறளையும் அதன் பொருளையும் தனித்தனித் தாள்களில் எழுதி அதையே மாலையாகக் கட்டி (ஸ்ரீராமஜெயம் போல), இளங்குமரனாரின் உடலுக்கு மலர் மாலையாக அணிவித்தார்.

தொடர்ந்து ஏராளமான மாலைகள் விழுந்ததால், அவ்வப்போது மலர் மாலைகளை அகற்றி வேறிடத்தில் குவித்து வைத்துக்கொண்டே இருந்தார்கள் உறவினர்கள். ஆனால், அந்த திருக்குறள் பாமாலையை மட்டும் கடைசி வரையில் அகற்றவே இல்லை. அமைச்சர் தங்கம் தென்னரசு, மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் ஆகியோர் அஞ்சலி செலுத்த வந்தபோது பிற மாலைகள் அனைத்தும் அகற்றப்பட்டன.

அப்போதும் கூட அந்த திருக்குறள் மாலையை அகற்றாமல், இளங்குமரனார் தலைக்கு அருகே அதனை வைத்திருந்தார்கள். மாலையில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்வதற்காக உடல் எடுத்துச் செல்லப்படும் வரையில், அந்த திருக்குறள் மாலை அய்யாவின் உடலை அணி செய்துகொண்டிருந்தது.

இது குறித்து, இளங்குமரனாரின் மூத்த மகன் இளங்கோவன் கூறுகையில், "அய்யா தமிழ் இலக்கியங்கள் எல்லாவற்றையும் தன்னுயிர் போல போற்றினாலும், திருக்குறள் மீது தனிப்பற்றும் பாசமும் வைத்திருந்தார். அவர் எழுதிய 600 நூல்களில் பெரும்பாலானவை திருக்குறள் தொடர்பானவை தான்.

'அகர முதலாம் ஆதியே போற்றி, மலர்மிசை ஏகும் மானடி போற்றி, தனக்குவமை இல்லாத் தகையடி போற்றி' என்று திருக்குறள் போற்றி பாடலையும் இயற்றியுள்ளார். ஒட்டுமொத்த திருக்குறள் நூலையும் சுருக்கி ஒரே வரியில், 'அறத்தால் பொருள் ஈட்டி இன்பமுடன் வாழ்க!' என்று வாழ்த்தும் வழக்கமும் அவரிடம் இருந்தது.

தன்னுடைய எழுதும் மேஜையில் கூட கடவுளர்கள் அல்லாமல், திருவள்ளுவர் மரச் சிற்பத்தை மட்டுமே அவர் வைத்திருந்தார். அவர் உயிராக நேசித்த திருக்குறளே மாலையாக வந்ததால், அதனை கடைசி வரையில் அவரது உடலில் இருந்து அகற்றாமல் வைத்திருந்தோம்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in