

வைகை ஆற்றில் மருத்துவக் கழிவுகளைக் கொட்டினால் போலீஸில் புகார் செய்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதற்கு மாநகராட்சி முடிவு செய்திருக்கிறது.
வைகை ஆறு மதுரையின் பெருமையாகவும், முக்கிய நீர் ஆதாரமாகவும் திகழ்கிறது. கால் நூற்றாண்டிற்கு முன் வரை இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர், வைகை ஆற்றில் கரைபுரண்டு ஓடியது. காலப்போக்கில் வைகை அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததோடு இணைப்பு நதிகள் மாயமானதால் வைகை ஆறு வறட்சிக்கு இலக்கானது. தற்போது வைகை அணையில் தண்ணீர் திறந்தால் மட்டுமே ஆற்றில் நீரோட்டம் காணப்படுகிறது.
அதனால், மதுரை நகருக்குள் ஓடும் வைகை ஆற்றில் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் சாக்கடை நீரும், தொற்சாலை ரசாயனக் கழிவுகளும் மட்டுமே ஓடுகிறது. மாநகராட்சி சாக்கடை நீரும், தொழிற்சாலைக் கழிவுநீரும் கலப்பதைத் தடுத்து நடவடிக்கை மேற்கொண்டதால் ஓரளவு சுத்தமாகி கொண்டிருக்கிறது. ஆனால், மக்கள் கொட்டும் பூஜை பொருட்கள், குப்பைகளால், ஆற்றை அதன் பழைய நிலைக்கு மீட்க முடியவில்லை. கடந்த சில மாதமாகத்தனியார் மருத்துவமனைகள், மருந்து விற்பனை நிறுவனங்கள் மருத்துவக் கழிவுகளை வைகை ஆற்றில் கொட்டிக் கொண்டிருக்கின்றன. அதனால், வைகை ஆறு தற்போது துர்நாற்றத்தைத் தாண்டி எதிர்காத்ல தலைமுறையினருக்கு நச்சு ஆகிகொண்டிருக்கிறது.
இந்நிலையில் வைகை ஆற்றில் மருத்துவக் கழிவுகளைக் கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாநகராட்சி முடிவு செய்திருக்கிறது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் கே.பி.கார்த்திகேயனிடம் கேட்டபோது, ''வைகை ஆற்றில் மருத்துவக் கழிவுகளைக் கொட்டுவோர் மீது இனி மாநகராட்சி கருணை காட்டப்போவதில்லை. வெறும் எச்சரிக்கை, அபராதம் நடவடிக்கை எடுக்கப்போவதில்லை. வைகை ஆற்றில் எந்த இடத்தில் மருத்துவக் கழிவுகளைக் கொட்டினாலும் அதன் பேட்ச் நம்பர், முகவரியைக் கண்டறிந்து எந்த நிறுவனம், எந்த மருத்துவமனைக்கும், மெடிக்கல் ஸ்டோருக்கு அந்த மருந்துகளை விற்பனை செய்தது என்பதைக் கண்டறிந்து சம்பந்தப்பட்ட நபர்கள், நிறுவனம் மீது போலீஸில் புகார் செய்து கடும் தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
வைகை ஆற்றைப் பாதுகாப்பதை மாநகராட்சி மட்டுமே மனது வைத்தால் முடியாது. மக்கள், பொறுப்புடன் செயல்பட வேண்டும். அவர்கள் தாங்கள் மட்டும் குப்பை கொட்டாமல் இருப்பதோடு, மற்றவர்களையும் அவர்கள் தடுக்க முன் வர வேண்டும். வைகை ஆற்றின் பாதுகாப்பை மாநகராட்சி மக்கள் இயக்கமாக மாற்ற முடிவெடுத்துள்ளது'' என்று தெரிவித்தார்.