

தமிழகத்தில் லாட்டரி கொண்டு வரப்படும் என்று கூறும் எடப்பாடி பழனிசாமி, இருட்டு அறையில் கருப்பு பூனையை தேடிக்கொண்டிருக்கிறார் என்று, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (ஜூலை 26) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் நேற்று (ஜூலை 25) வரை 15 ஆயிரம் கன அடிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இன்று திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. கடைமடை வரை தண்ணீர் சென்றுசேர தேவையான அளவுக்கு தண்ணீர் காவிரியில் திறந்து விடப்படும்.
காவிரி - கோதாவரி இணைப்பு திட்டத்துக்கு ஒருபோதும் சம்மதிக்க மாட்டோம் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. அவர்கள் காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு, உச்ச நீதிமன்ற தீர்ப்பு என எதையும் எப்போதும் மதித்ததில்லை. அவர்கள் அப்படித்தான் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.
தமிழகத்தில் கருணாநிதி ஆட்சியில் 48 அணைகள் கட்டப்பட்டது. இப்போது, தமிழகத்தில் அதிகளவில் தடுப்பணைகள் கட்ட முடிவு செய்துள்ளோம். இதன் மூலம், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, நீராதாரமும் பெருகும். கடந்த ஆட்சியில் குடிமராமத்து பணிகள் முழுமையாக நடைபெறவில்லை. இப்போது, முறைப்படி நிதி ஒதுக்கப்பட்டு ஏரிகள் அனைத்தும் முழுவதுமாக தூர்வாரப்படும்.
தமிழகத்தில் லாட்டரி சீட்டு கொண்டு வரப்படுவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். எந்தக் குறையும் சொல்ல முடியாததால்தான் இல்லாத ஒன்றை அவர் சொல்லிக் கொண்டிருக்கிறார். இருட்டு அறையில் கறுப்பு பூனையை எடப்பாடி பழனிசாமி தேடிக்கொண்டிருக்கிறார்".
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்சசியில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெகத்ரட்சகன் (அரக்கோணம்), கதிர்ஆனந்த் (வேலூர்), சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார் (அணைக்கட்டு), கார்த்திகேயன் (வேலூர்), அமலு விஜயன் (குடியாத்தம்), ஜெ.எல்.ஈஸ்வரப்பன் (ஆற்காடு) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.