

தமிழகத்துக்கு தேவையான மக்கள் நலத்திட்டங்களை மத்திய அரசு அமல்படுத்த கோரியே பிரதமரை சந்தித்தோம், 3 மாதமே ஆன திமுக ஆட்சிப்பற்றி குறைகூற என்ன இருக்கிறது என்று எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தார்.
டெல்லியில் பிரதமர் மோடியை அதிமுக ஒருங்கிணப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவின் முக்கியத்தலைவர்கள் சந்தித்து பேசினர். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு.
”கரோனா வைரஸை கட்டுப்படுத்தவும் அதற்கு தேவையான தடுப்பூசிகளை வழங்கவும் நானும் ஓபிஎஸ் அவர்களும் பிரதமரை கேட்டுக்கொண்டோம். மேகதாது அணை பிரச்சினையைப் பொறுத்தவரை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதுவரை, அதன் பின்னர் ஓபிஎஸ் முதல்வராக இருந்தபோதும், அதன் பின்னர் நான் முதல்வராக இருந்தபோதும் அணையைக் கட்டக்கூடாது, அதற்கு மத்திய அரசு உதவக்கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளோம். அதையே இப்போது தொடர்ந்து வலியுறுத்தியுள்ளோம்.
மேகதாது அணை கட்டப்பட்டால் டெல்டா மாவட்டம் பாலைவனமாகிவிடும். தமிழ்நாட்டில் 16 மாவட்டங்கள் காவிரி நீரை குடிநீர் ஆதாரமாக கொண்டுள்ளன. அதை பிரதமர் கவனத்தில் கொண்டு முடிவெடுக்க கேட்டுக்கொண்டோம். அதோடு நீர் பற்றாக்குறை மாநிலமாக தமிழகம் உள்ளது. அதை போக்குவதற்காக குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோதாவரி-காவிரி நதிநீர் இணைப்புத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற கோரிக்கை வைத்தோம்.
சாலை திட்டங்களை விரைந்து நிறைவேற்றவும், மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது, கைது நடவடிக்கை குறித்தும் அதை தடுத்து நிறுத்த கோரிக்கை வைத்தோம்”
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
பின்னர் செய்தியாளர்கள் கேள்விக்கு எடப்பாடி அளித்த பதில்:
கட்சியிலிருந்து முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் விலகுகின்றனர், தலைமை மீது அதிருப்தி காரணமா?
தேர்தலில் வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் அவர்கள் விலகிச் செல்கின்றனர். தொண்டர்கள் யாருக்கும் அதிருப்தி இல்லை. கட்டுக்கோப்பான இயக்கமாக அதிமுக உள்ளது.
பிரதமரிடம் தமிழக அரசின் ஆட்சி மீது புகார் எதுவும் சொன்னீர்களா?
அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்று 3 மாதம் தான் ஆகிறது. இதில் என்ன குறைகளை நாங்கள் சொல்ல முடியும். தமிழக மக்களுக்கு தேவையான, நன்மையளிக்கும் திட்டங்களை நிறைவேற்றக் கோரினோம் அவ்வளவே.
தமிழகத்தில் லாட்டரி விற்பனை இல்லை என்று அரசு கூறியுள்ளதே?
அப்படி ஒரு தகவல் இருந்ததால் அறிக்கை விட்டோம், கற்பனையாக நான் சொல்வதாக சொல்லியிருக்கிறார்கள், எதையும் நான் கற்பனையாக சொல்லவில்லை, தமிழக அரசு லாட்டரி சீட்டை மீண்டும் கொண்டுவர உள்ளது என எங்களுக்கு தகவல் கிடைத்ததால் ஆட்சேபித்தோம். அவர்கள் இல்லை என்று சொல்லிவிட்டார்கள் கொண்டுவரவில்லை என்றால் நல்லதுதான்.
உங்கள் பயணத்தில் உள்துறை அமைச்சரை சந்திக்கும் திட்டம் உண்டா?
இதுவரை இல்லை, அப்படி வாய்ப்பு கிடைத்தால் மத்திய உள்துறை அமைச்சரை சந்திப்போம்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார்.