கோவை மேயர் ராஜினாமாவை தொடர்ந்து 18 கவுன்சிலர்கள் களையெடுப்பா?: அதிரடி நடவடிக்கையில் அதிமுக தலைமை

கோவை மேயர் ராஜினாமாவை தொடர்ந்து 18 கவுன்சிலர்கள் களையெடுப்பா?: அதிரடி நடவடிக்கையில் அதிமுக தலைமை
Updated on
1 min read

கோவை மேயர் பதவி ராஜினாமா செய்யப்பட்டதை அடுத்து பல்வேறு கவுன்சிலர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை இருக் கும் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கோவை மேயர் செ.ம.வேலுச் சாமி மீதான புகார்களும், அவரு டைய கார் விபத்தும் அவர் தன் பதவியை ராஜினாமா செய்யும் நிலையை ஏற்படுத்தின.

ஏற்கெனவே தமிழ்நாட்டில் மேயர் பதவி காலியாக உள்ள இடங் களுக்கு விரைவில் தேர்தல் நடத்த வேண்டியுள்ளதால், அதனுடன் சேர்த்து கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கும் தேர்தல் நடை பெறலாம் என்று தெரிகிறது.

பீதியில் கவுன்சிலர்கள்

அதிமுக-வின் முக்கிய புள்ளிகள் சிலர். கூறும்போது: ’கோவை யில் மேயர் பதவி ராஜினாமா செய்யப்பட்டதைத் தொடர்ந்து தலைமைக்கு ஏராளமான புகார்கள் சென்று கொண்டிருக்கின்றன.

அதில், எந்த கவுன்சிலர் எப்படியெல்லாம் வசூல் ராஜாவாகி கட்சியின் பெயரை கெடுக்கிறார்கள் என்கிற விவரங்களும், அவர்களை களையெடுக்க வேண்டும் என்றும் புகார் கூறப்பட்டுள்ளதாம். அதைப் பார்த்து தலைமையே திகைத்துப் போயிருக்கிறதாம்.

அதே போல் கோவை நகரில் பானிபூரி, கரும்பு ஜூஸ் விற்கும் சாலையோரக் கடைகளில் வசூலில் ஈடுபடும் கவுன்சிலர்களைப் பற்றியும் புகார்கள் சென்றுள்ளன.

வணிக வளாக வசூல்

இவர்கள் தவிர, வணிக வளாகங்கள் விஷயத்தில் தனிக் கவனம் செலுத்தி 30 சதவீதம் கமிஷன் பெறுவதில் ஒரு நிலைக் குழு தலைவர் பிரதான இடம் வகிக்கிறாராம். இதில் மட்டும் அவர் கோடிக்கணக்கில் வசூல் பார்க்கிறார் என்கிற தகவலும் தலைமைக்குச் சென்றுள்ளது. போதாகுறைக்கு, உளவுத்துறை போலீஸார் மூலமும் இதை உறுதிப்படுத்தும் பணியும் நடந்து வருவதாகத் தெரிகிறது.

இப்படி 18 கவுன்சிலர்கள் பட்டியலை தற்போது உளவுத் துறை போலீஸார் தயார் நிலையில் வைத்துள்ளதாகவும் சொல்கிறார்கள். அநேகமாக இந்த கவுன்சிலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படலாம். அப்படி நடவடிக்கை எடுக்கப்பட் டால் அந்த வார்டுகளுக்கும் மேயர் தேர்தலோடு சேர்த்து தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது என்றனர்.

அதிமுக தலைமையிடமிருந்து எந்த மாதிரியான அதிரடி உத்தரவு வருமோ என்ற கலக்கத்தில் இருக்கிறார்கள் கோவை மாநகராட்சி கவுன்சிலர்கள்.

அமைச்சரை வாழ்த்திய முன்னாள் மேயர்

கோவை மேயர் பதவியை ராஜினாமா செய்த செ.ம.வேலுச்சாமி கோவை மாவட்ட தலைமை நிலையமான இதயதெய்வம் மாளிகைக்கு சனிக்கிழமை காலையில் வந்தார். அமைச்சர் வேலுமணியை சந்தித்து கோவை மாநகர் மாவட்டச் செயலாளராக கூடுதலாக பொறுப்பேற்றதற்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மற்றவர்கள் வணக்கம் தெரிவித்ததற்கு பதில் வணக்கம் மட்டும் சொன்னார். இதுகுறித்து கட்சிக்காரர்கள் கூறும்போது, ‘வேலுச்சாமி வகித்து வந்த மாவட்ட செயலாளர் பொறுப்புகளை கூடுதலாக வேலுமணி கவனிக்க இருக்கிறார். அதற்கான ஆவணங்கள், மினிட் நோட்டு புத்தகங்களை ஒப்படைக்கவாவது அவர் வந்துதானே ஆக வேண்டும். அதுதான் அவர் வந்து பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டுச் சென்றுள்ளார்’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in