

புதுச்சேரியில் புதிதாக 5 குழந்தைகள் உட்பட 86 பேருக்கு கரோனா தொற்று இன்று உறுதியானது. தொற்றுக்கு முதியவர் பலியானதைத்தொடர்ந்து இதுவரை 1790 பேர் பலியாகியுள்ளனர்.
இதுவரை 6.77 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் 4,766 பேருக்கு கரோனா தொற்று பரிசோதனை நேற்று செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி - 61, காரைக்கால் - 16, ஏனாம் - 1, மாஹே - 8 பேர் என மொத்தம் 86 (1.80 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரியில் உள்ள குழந்தைகளுக்கான கோவிட் வார்டில் 5 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5 வயதுக்கு உட்பட்ட 3 குழந்தைகள், 5 வயதுக்கு மேற்பட்ட 2 குழந்தைகள் உள்ளனர்.
மேலும், தொற்று உறுதி செய்யப்பட்ட இரு தாய்மார்களுடன் குழந்தைகளும் அங்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர். ரெட்டியார்பாளையம் சுதாகர் நகரை சேர்ந்த 59 வயது முதியவர் இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,790 ஆகவும், இறப்பு விகிதம் 1.49 சதவீதமாகவும் உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் தற்போது ஜிப்மரில் 71 பேரும், இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரியில் 43 பேரும், கோவிட் கேர் சென்டரில் 25 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் 736 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மாநிலம் முழுவதும் மொத்தம் 909 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
98 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 97.76 சதவீதம் ஆக உள்ளது. சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 6,77,446 பேருக்கு (2வது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது.