

தமிழகத்தில் தேர்தல் தோல்விக்குப்பின் முதன்முறையாக அதிமுக தலைவர்கள் பிரதமர் மோடியை சந்திக்கின்றனர். நேற்று டெல்லிச் சென்ற ஓபிஎஸ்-இபிஎஸ் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமனி உள்ளிட்டோர் பிரதமர் மோடியை இன்று காலை சந்தித்து பேசினர்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஆனால் தேர்தலில் எதிர்ப்பார்த்த வெற்றியை அதிமுக கூட்டணி பெற முடியவில்லை. 65 இடங்கள் மட்டுமே பெற்ற அதிமுக ஆட்சியை திமுகவிடம் பறிகொடுத்தது. தேர்தல் நேரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் இடையே இருந்த பனிப்போர், வேட்பாளர் தேர்வில் நடந்த குளறுபடி, அமமுக, போட்டி வேட்பாளர்களின் போட்டி போன்றவை காரணமாக தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவியது.
மேலுக்கு ஒற்றுமையுடன் காணப்படுவதுபோல் தோற்றமளித்தாலும் அதிமுகவுக்கு யார் பெரியவர் என்கிற போட்டி ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே தொடர்ந்து நடந்து வருகிறது. அதிமுக பொதுச் செயலாளர் பதவி குறித்த சர்ச்சை தொடர்ந்துவரும் நிலையில் சசிகலா திடீரென அதிமுக உள் விவகாரங்கள் குறித்து பேசுவது, தொண்டர்கள், நிர்வாகிகளிடையே உரையாடல் நடத்துவது அதிமுக தலைமைக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு புகாரில் வழக்குப்பதிவு செய்துள்ள லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் ரெய்டு நடத்தி ரொக்கப்பணம், ஆவணங்களை கைப்பற்றினர். தொடர்ந்து மற்ற அமைச்சர்கள் மீதும் இதேப்போன்ற நடவடிக்கை தொடரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அதிமுக தலைவர்கள் ஓபிஎஸ்- இபிஎஸ் இருவருக்கும் டெல்லியிலிருந்து அழைப்பு வந்ததாக கூறப்பட்ட நிலையில் நேற்று காலை இருவரும் அவசர அவசரமாக டெல்லி புறப்பட்டுச் சென்றனர். நேற்று காலை ஓபிஎஸ் டெல்லி சென்றார், இரவு எடப்பாடி பழனிசாமி டெல்லி புறப்ப்ட்டுச் சென்றார். இன்று காலை பிரதமர் நேரம் அளித்த நிலையில் பிரதமரை மக்களவை வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் சந்தித்தனர்.
அவர்களுடன் தம்பிதுரை, எஸ்.பி.வேலுமணி, மனோஜ் பாண்டியன், தளவாய் சுந்தரம், உள்ளிட்டோர் உடன் சென்றனர். இந்த சந்திப்பின் முக்கிய நோக்கம் அதிமுக உட்கட்சிப் பிரச்சினை என அரசியல் வட்டாரத்தில் தகவல் ஓடுகிறது. மற்றொரு பிரச்சினை முன்னாள் அமைச்சர்கள் மீது திமுக அரசு எடுக்கும் சட்ட நடவடிக்கைகள் குறித்தும் இருக்கும் என சொல்லப்படுகிறது.
சட்டப்பேரவை தேர்தலுக்குப்பின் பிரதமரை அதிமுக தலைவர்கள் சந்திக்காத நிலையில் கடந்த 2 மாதங்களில் நடந்த பல்வேறு அரசியல் நிகழ்வுகள் குறித்தும் பேச்சுவார்த்தை இருக்கும் என தெரிகிறது. சசிகலா, அமமுகவுடன் சேர்ந்து தேர்தலை சந்தியுங்கள் என பாஜக தரப்பில் ஏற்கெனவே ஆலோசனை வழங்கிய நிலையில் அதிமுகவின் முக்கிய தலைவர்கள் அதை புறக்கணித்து தேர்தலை சந்தித்தனர்.
தற்போதுள்ள சூழ்நிலையில் ஒன்றுப்பட்ட அதிமுக என்பது அதிமுக குறித்த நம்பிக்கையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும், அடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெறுவதே அதற்கு அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கும், அதிமுக நிலையாக நிற்பதற்கும் வாய்ப்பாக அமையும் என்பதால் சசிகலா, அமமுகவுடன் அதிமுகவின் நிலைப்பாடு முக்கிய பேச்சு வார்த்தை பொருளாக இருக்கலாம் என்றும், அதிமுக தலைவர்களுக்கு எதிரான வழக்குகள் வருமானால் அதுகுறித்த அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும் பேசுவதற்கும், பாஜகவுக்கு தமிழகத்தில் அடுத்துவரும் தேர்தல்களில் உரிய முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அதிமுகவுக்கு அழுத்தம் தருவது போன்ற காரணங்களுக்காக அதிமுக தலைவர்களை பிரதமர் அழைத்திருக்கலாம் என்று தெரிகிறது.
பிரதமரை சந்தித்தப்பின் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் அதிமுக தலைவர்கள் சந்திக்க வாய்ப்புள்ளது என தெரிகிறது.