Published : 26 Jul 2021 11:39 AM
Last Updated : 26 Jul 2021 11:39 AM

எம்எல்ஏக்களாக வெற்றி பெற்றதை எதிர்த்த தேர்தல் வழக்குகள்; துரைமுருகன், விஜயபாஸ்கர், இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்

சென்னை

எம்எல்ஏக்களாக வெற்றி பெற்றதை எதிர்த்த தேர்தல் வழக்குகளில் அமைச்சர் துரைமுருகன், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், இந்திய தேர்தல் ஆணையம் உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விராலிமலை

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி அதிமுக எம்எல்ஏவான, சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, திமுக வேட்பாளர் எம்.பழனியப்பன் (23,644 வாக்குகள் வித்தியாசம்) தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார்.

வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், பணம் ஆகியவை விநியோகித்து ஊழல் நடவடிக்கைகள் மூலம் விஜயபாஸ்கர் பெற்ற வெற்றியை செல்லாது என அறிவித்து, தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். தேர்தல் ஆணையம் நிர்ணயித்தத் தொகையைவிட அதிகமாக செலவு செய்துள்ளதாகவும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் கட்டுப்பாட்டு கருவிகளில் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாகவும் மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.

காட்பாடி

வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதி எம்எல்ஏவான, நீர்ப்பாசனத் துறை அமைச்சர் துரைமுருகன் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் வி.ராமு (745 வாக்குகள் வித்தியாசம்) தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தகுதியான வாக்குகள் நிராகரிக்கப்பட்டது, தேர்தல் நடைமுறைகள் உரிய முறையில் பின்பற்றப்படவில்லை போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதுடன், தபால் வாக்குகளையும், மின்னணு வாக்குகளையும் மறு எண்ணிக்கை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

பெருந்துறை

ஈரோடு மாவட்ட பெருந்துறை தொகுதியின் அதிமுக எம்எல்ஏ ஜெயக்குமார் வெற்றியை எதிர்த்து, திமுக சின்னத்தில் போட்டியிட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் கே.கே.சி.பாலு (14,507 வாக்குகள் வித்தியாசம்) தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மின்னணு வாக்குப்பதிவில் குறைபாடுகள் இருந்ததை சுட்டிக்காட்டியும், அவற்றை நிவர்த்தி செய்யாமல் தேர்தல் நடத்தப்பட்டதாகவும், வாக்கு எண்ணிக்கையிலும் குளறுபடிகள் இருந்ததாகவும், 81 இயந்திரங்களில் குறைபாடுகள் உள்ளதாகவும் மனுவில் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த தேர்தல் வழக்குகள் நீதிபதி வி.பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தபோது வழக்கு குறித்து அமைச்சர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், பெருந்துறை ஜெயக்குமார், இந்திய தேர்தல் ஆணையம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, தொகுதி தேர்தல் அதிகாரிகள் ஆகியோர், 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை செப்டம்பர் 6 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x