

கைது செய்யப்பட்ட பாமக பெண் ஊராட்சித் தலைவரை விடுதலை செய்ய தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட வெங்கத்தூர் ஊராட்சி மன்றத் தலைவராக பணியாற்றி வருபவர் சுனிதா பாலயோகி. இவர் பாமக மாநில துணைப்பொதுச்செயலாளர் பாலயோகியின் மனைவி. வெங்கத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தமிழக அரசின் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவற்றை வழங்குவதற்கான அடையாளச் சீட்டுக்களை சுனிதா பாலயோகி கடந்த 18-ம் தேதி வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதிமுக நிர்வாகி வசந்த் தலைமையிலான கட்சியினர், சுனிதா பாலயோகி மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த கங்காதரனை தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததுடன், தாக்கவும் முயற்சி செய்திருக்கிறார்.
இதனால் அச்சமடைந்த சுனிதா வசந்த் மீது புகார் அளிப்பதற்காக மணவாள நகர் காவல்நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவரது புகாரை ஏற்க மறுத்த காவல்துறையினர் அவர் மீது வசந்த் அளித்த புகாரின் அடிப்படையில் சுனிதாவை இரவு 8.00 மணிக்கு கைது செய்துள்ளனர். அதற்குப் பிறகும் வசந்த்துக்கு சொந்தமான கடையில் பணியாற்றும் விக்கி என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் பாமக துணைப்பொதுச்செயலாளர் பாலயோகி உள்ளிட்ட மேலும் பலர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். பாலயோகிக்கும் இந்த நிகழ்வுகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்ற போதிலும் பாமக நிர்வாகியான அவரை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் மீது பொய் வழக்கை பதிவு செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சுனிதாவை இரவு முழுவதும் திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்துக் கொடுமைப்படுத்தியுள்ளனர். மாலை 6 மணிக்கு மேல் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது என்று டி.கே.பாசு வழக்கில் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால், அதை மீறி பெண் என்றும் பாராமல் இரவு 8.00 மணிக்கு கைது செய்து காலை7 மணி வரை காவல்நிலையத்தில் அடைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர். அதுமட்டுமின்றி, 7 ஆண்டுகளுக்கும் குறைவான தண்டனை கிடைக்கும் பிரிவுகளில் எவரேனும் கைது செய்யப்பட்டால், அவர்கள் தலைமறைவு ஆவதற்கு வாய்ப்பில்லை எனில் அவர்களை பிணையில் விடுதலை செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
ஆனால் நீதிமன்றத்திற்கு அளவுக்கு அதிகமான அழுத்தம் கொடுத்து சுனிதாவை சிறையில் அடைக்க அனுமதி பெற்றிருக்கிறது காவல்துறை. அதுமட்டுமின்றி, சுனிதா குடும்பத்தினருக்கும் மிரட்டல் விடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறி பெண் ஊராட்சித் தலைவர் சுனிதா பாலயோகியை இரவில் கைது செய்து கொடுமைப்படுத்திய காவல் அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது செய்யப்பட்ட சுனிதா உள்ளிட்ட 13 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய தமிழக அரசு ஆணையிட வேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.