Published : 26 Jul 2021 11:17 AM
Last Updated : 26 Jul 2021 11:17 AM

இளங்குமரனார் மறைவு; தமிழையே உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

இளங்குமரனார்: கோப்புப்படம்

சென்னை

முதுபெரும் தமிழ் அறிஞரான இளங்குமரனார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 26) வெளியிட்ட இரங்கல் செய்தி:

"தமிழையே உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்த முதுபெரும் அறிஞரான இளங்குமரனார் மறைவு தமிழ்மொழிக்கும் தமிழகத்துக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். இலக்கணச் செழுமையும் இலக்கிய வளமும் கொண்ட தமிழ்மொழியை, அதன் பண்பாட்டைத் தமிழர்களின் இல்லந்தோறும் நிலைநிறுத்திடுவதற்காக தனது 94-வது அகவையிலும் தொடர்ந்து பணியாற்றியவர் இளங்குமரனார்.

தமிழ்மறையாம் குறள்நெறி வழியில் தமிழர்களின் திருமணங்களை முன்னின்று நடத்தியதுடன், வள்ளுவர் தவச்சாலை என்பதை நிறுவி, வெள்ளுடை ஞானியாக வாழ்ந்தவர். புத்தாயிரம் (2000) ஆண்டு தொடக்கத்தில் கருணாநிதி குமரி முனையில் 133 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்த மகத்தான நிகழ்வில், இளங்குமரனார் பங்கேற்று உரையாற்றியது தனிச்சிறப்பாகும்.

வடமொழி - பிறமொழி ஆதிக்கத்திலிருந்து தமிழைப் பாதுகாக்கும் முனைப்புடன், சமஸ்கிருத மந்திரங்களை முற்றிலும் தவிர்த்து, 4,000-க்கும் மேற்பட்ட திருமணங்களை திருக்குறள் ஓதியும், தமிழில் வாழ்த்தியும் நடத்தி வைத்தவர் இளங்குமரனார்.

முதல்வர் ஸ்டாலின்: கோப்புப்படம்

அடுத்தடுத்த தலைமுறைகளிலும் தமிழ் தழைத்திருக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் 500-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். பழந்தமிழர் வாழ்வியல் அடிப்படையில் உடல்நலன் காக்கும் முறைகளையும் அவர் தொடர்ந்து கடைப்பிடித்து, நலவாழ்வு வாழ்ந்து, அவற்றை இன்றைய இளைஞர்களும் பின்பற்றும் வழிமுறைகளைக் கற்றுத் தந்தவர்.

இளங்குமரனாரின் உடை போலவே அவரது உள்ளமும் தூய்மையானது. அயராது அவர் மேற்கொண்ட தமிழ்ப்பணி போற்றுதலுக்குரியது.

இளங்குமரனாரின் மறைவால் வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழ்ச்சான்றோர்கள் அனைவருக்கும் தமிழகத்தின் முதல்வர் என்ற முறையிலும் தனிப்பட்ட முறையிலும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் போல என்றென்றும் நிலைத்திருக்கும் இளங்குமரனாரின் இறவாப் புகழ்!".

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x