Last Updated : 26 Jul, 2021 10:58 AM

 

Published : 26 Jul 2021 10:58 AM
Last Updated : 26 Jul 2021 10:58 AM

மூத்த தமிழறிஞர் இரா.இளங்குமரனார் மறைவு: அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய கோரிக்கை

இரா.இளங்குமரனார்: கோப்புப்படம்

தமிழக அரசின் திரு.வி.க. விருது பெற்ற மூத்த தமிழறிஞரான முதுமுனைவர் இரா.இளங்குமரனார் நேற்று (ஜூலை 25) இரவு காலமானார். அவருக்கு வயது 94. இறுதி நிகழ்ச்சிகள் இன்று மாலை (ஜூலை 26) 4 மணிக்கு மதுரை திருநகர் இராமன் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து, உடல் நல்லடக்கம் நடைபெறும். மறைந்த தமிழறிஞர் இரா.இளங்குமரனாருக்கு இளங்கோவன், பாரதி ஆகிய 2 மகன்களும், இரு மகள்களும் உள்ளனர். பேத்தி முத்தரசி ஐபிஎஸ் அதிகாரியாகப் பணிறாற்றுகிறார்.

வாழ்க்கை குறிப்பு

முதுமுனைவர் இரா.இளங்குமரனார் 30.1.1927-ல் நெல்லை மாவட்டம் வாழவந்தாள்புரம் கிராமத்தில் பிறந்தவர். தந்தை படிக்கராமு, தாயார் பெயர் வாழவந்தஅம்மை. இளம் வயதிலேயே சொந்தமாக பாடல் இயற்றும் அளவுக்கு தமிழ் ஆர்வமும், புலமைத்திறனும் பெற்ற இவருக்கு 19 வயதிலேயே (4.8.1946) சங்கரன்கோவில் அருகில் உள்ள கரிவலம்வந்தநல்லூர் பள்ளியில் தமிழாசிரியர் பணி கிடைத்தது. பிறகு முறைப்படி புலவர் படிப்புக்கான தேர்வு எழுதி, 1951-ல் சென்னை பல்கலைக்கழகத்தில் முதல் வகுப்பில் வெற்றிபெற்றார்.

முழுமையாக கிடைக்கப்பெறாமல், காலத்தால் செல்லரித்துப்போன குண்டலகேசி காப்பியத்தை தன்னுடைய கற்பனைத் திறனாலும், கவிதை இயற்றும் ஆர்வத்தாலும் முழுமை செய்தவர். அந்நூலினை 1958-ல் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அரங்கேற்றம் செய்தார்.

1963-ல் இவர் எழுதிய திருக்குறள் கட்டுரை தொகுப்பு நூலை, தமிழகம் வந்திருந்த அன்றைய பிரதமர் நேரு வெளியிட்டார். தேவநேயப் பாவாணர், பாவேந்தர் பாரதிதாசன், தொல்காப்பியர் ஆகியோரின் முழு படைப்புகளையும் தொகுக்கிற பணியும் அவர் செய்தார். அந்நூல்களை தமிழ்மண் பதிப்பகம் இளவழகன் செம்பதிப்பாக வெளியிட்டார்.

காரைக்குடி அருகே உள்ள திருக்கோவிலூர் மடம் சார்பில், சங்க இலக்கிய வரிசை நூல்களைத் தொகுக்கும் பணி நடைபெற்றபோது அதில் புறநானூற்றை எளிய தமிழில் எழுதியவரும் இவரே. இந்தத் தொகுப்பு நூலை 2003-ம் ஆண்டு அன்றைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வெளியிட்டார். இவரது நூல்கள் பலவற்றை மதுரை பாரதி புத்தக நிலையமும் வெளியிட்டுள்ளது.

திருநகர் முத்துத்தேவர் முக்குலத்தோர் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்த காலத்திலேயே, மதுரை மாவட்ட தமிழாசிரியர் கழகச் செயலாளர், தமிழ்க் காப்பு கழகச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளையும் கவனித்தார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றிய தமிழண்ணல், பள்ளி ஆசிரியராக இருந்த இளங்குமரனாரை பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்பிக்கும் பணிக்கும் பயன்படுத்திக் கொண்டார்.

தமிழ் முறைத் திருமணங்கள்

தமிழர்கள் நீண்டகாலமாக கடைபிடித்து வந்ததும், பழந்தமிழ் இலக்கியங்களில் சொல்லப்பட்டதுமான முறையில் திருமணங்களை நடத்தி வைப்பதில் ஆர்வம் காட்டினார். 1951-ல் தொடங்கிய இந்தப் பணியை, தனது 92 வயது வரையில் அவர் தொடர்ந்தார். இதுவரைவில், 4,865 தமிழ் முறைத் திருமணங்களை நடத்தி வைத்திருக்கிறார். தற்போது அவரது மாணாக்கர்கள் அந்தப் பணியைத் தொடர்கிறார்கள்.

திருச்சியில் திருவள்ளுவர் தவச்சாலை என்ற பெயரில் தமிழ்ப்பணி ஆற்றிவந்த இவர், அங்கே 45,000 நூல்கள் கொண்ட நூலகத்தையும் நடத்தினார். பிற்காலத்தில் அதில் 40 ஆயிரம் நூல்களை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்துக்கு நன்கொடையாக வழங்கினார்.

வயது முதிர்வு காரணமாக மதுரை திருநகருக்கே திரும்பிய பின்னரும் கூட அவர் தமிழ்ப்பணியை நிறுத்திக்கொள்ளவில்லை. மதுரை வடக்குமாசி வீதியில் உள்ள மணியம்மை பள்ளியில் மாதந்தோறும் நடைபெறுகிற கருத்தரங்குகளில் பங்கேற்றார்.

கூடவே, இளம் பிள்ளைகளுக்கு பழந்தமிழ் இலக்கியங்களை அறிமுகப்படுத்தும் நோக்கில் தொல்காப்பியம், திருக்குறள், திருமுருகாற்றுப்படை, பொருநர்ஆற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு என்று எழுதினார்.

சுமார் 20, 30 பக்கங்களே கொண்ட இந்தக் குறுநூல்களை மதுரை புரட்சிக் கவிஞர் மன்றம் மாதந்தோறும் வெளியிட்டு, நிறைய பேருக்கு கொண்டு சேர்த்தது. மதுரை நான்காம் தமிழ்ச்சங்கத்தின் மிகமூத்த ஆட்சி மன்றக் குழு உறுப்பினரும் இவரே.

மதுரை தமிழ்ச் சங்கம் குறித்த வரலாற்று நூலையும் இவர் எழுதியிருக்கிறார். மொத்தம் இவர் எழுதிய நூல்கள் 550. திரு.வி.க. போல இறுதிக்காலத்தில் கண்பார்வை பறிபோய்விட்டால், தன்னுடைய எழுத்துப் பணி பாதிக்கப்பட்டுவிடக் கூடாதே என்பதற்காக கண்களை மூடியே எழுதும் திறனை வளர்த்துக்கொண்டவர் இவர்.

விருதுகள்

1978-ம் ஆண்டிலேயே ஆளுநர் கையால் நல்லாசிரியர் விருது பெற்ற இவர், அதன் பிறகு எண்ணற்ற விருதுகளை பெற்றிருக்கிறார். 1991-ல் ஈரோடு வேலா.ராசமாணிக்கத்தின் குரலியம் அமைப்பு இவருக்கு செந்தமிழ் அந்தனர் பட்டம் தந்தது. 1994-ல் தமிழக அரசு திருவிக விருது கொடுத்து சிறப்பித்தது

1995-ல் மதுரை ஆடி வீதி திருவள்ளுவர் கழகம் சார்பில் திருக்குறள் செம்மல் விருது, 1996-ல் திருச்சி தமிழ் சங்க விருது, 1995-ல் திருச்சி மாவட்ட திருக்குறள் பேரவை சார்பில் குன்றக்குடி அடிகளார் கொடுத்த குறள் ஞாயிறு விருது, 1997 மதுரை புரட்சிக் கவிஞர் மன்றம் சார்பில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கொடுத்த பெரியார் விருது, 1999-ல் சென்னை தமிழ் சான்றோர் பேரவை (நகலகம் அருணாசலம்) தந்த மொழிப்போர் மறவர் விருது, 2000-ல் சென்னை கம்பன் கலகம் சார்பில் கம்பர் விருது வழங்கப்பட்டது.

2003-ல் பதிப்புச் செம்மல் மெய்யப்பன் வழங்கிய தமிழ் இயக்க செம்மல் விருது, 2004-ல் திருவாடுதுறை மடம் சிவப்பிரகாச அடிகளார் வழங்கிய திருக்குறள் செம்மல் விருது, 2004-ல் பழ.நெடுமாறன் வழங்கிய உலகப் பெருந்தமிழர் விருது, அதே ஆண்டில் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வழங்கிய தமிழ் செம்மல் விருது, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் வழங்கிய முது முனைவர் விருது, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் வழங்கிய ரூ.5 லட்சம் பரிசுடன் கூடிய வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

வடஅமெரிக்க தமிழ்ச்சங்க கூட்டமைப்பு வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது, கனடா இலக்கியத் தோட்ட விருது போன்றவை அவர் பெற்ற விருதுகளில் குறிப்பிடத்தக்கவை. பெற்ற விருதுகளுக்கான பரிசுத் தொகையை தமிழ் வளர்ச்சிப் பணிகளுக்கே செலவிட்டவர் இரா.இளங்குமரனார்.

இரங்கல்

அவரது மறைவுக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் மற்றும் உலகலாவிய தமிழறிஞர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அவரது உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும் என்று மதுரை புரட்சிக்கவிஞர் மன்ற நிறுவனர் வரதராசன், திருச்சி மாவட்ட தமிழ் அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் வீ.ந.சோ. ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x