Last Updated : 26 Jul, 2021 09:50 AM

 

Published : 26 Jul 2021 09:50 AM
Last Updated : 26 Jul 2021 09:50 AM

விளைநிலங்களை ஆக்கிரமிக்கும் மதுபாட்டில்கள்; விவசாயிகள், கால்நடைகள் வளர்ப்போர் வேண்டுகோள்

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே ஒரு வயலின் மரத்தடியில் மதுப்பிரியர்கள் விட்டுச் சென்ற மதுபாட்டில்கள், தண்ணீர் பாட்டில்கள், கப் உள்ளிட்ட பொருட்கள்.

அரியலூர்

விளைநிலங்கள், வாய்க்கால்கள், ஓடைகளில் அதிகளவு ஆக்கிரமித்து வரும் மதுபான பாட்டில்களால் விவசாயிகள், கால்நடைகள் பாதிக்கப்படுவதாகவும், கண்ணாடி பாட்டில்களுக்கு மாற்று கொண்டு வர அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், விவசாயிகள், கால்நடைகள் வளர்ப்போர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மதுபானம் என்பது பலருக்கு அத்தியாவசிய பொருளாகி விட்டது. நல்ல நிகழ்வுகள் நடந்தாலும், துக்க நிகழ்வுகள் நடந்தாலும் அங்கு மதுபானங்கள் முக்கிய பங்கினை வகிக்கிறது. திருமணம், கோயில்களில் கிடா வெட்டு என்று வந்து விட்டால், அப்பகுதியில் மதுபான பாட்டில்கள் அதிகம் கிடப்பதை காண முடியும்.

தற்சமயம் மதுபானங்களை அருந்தும் நபர்கள் குழுவாக சென்று விளைநிலங்களில் உள்ள மரத்தடி, வாய்க்கால் பகுதிகளில் உள்ள நிழலான பகுதிகள், ஓடை பகுதிகள் என இடம் தேர்வு செய்து மது அருந்தும் பழக்கத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். இதனால், விளைநிலங்கள், வாய்க்கால்களில் அதிகளவு மதுபாட்டில்கள் கிடப்பதை காணமுடிகிறது.

அத்துடன் முருக்கு உள்ளிட்ட நொறுக்கு தீனிகளின் பாக்கெட்டுகள், மது அருந்த பயன்படுத்தப்படும் பாலிதீன் கப் வகைகள், தண்ணீர் பாட்டில்கள் என பலவும் வயல்களில் கிடப்பதை காண முடிகிறது. சிலர் குடித்து முடித்த பின்பு அந்த பாட்டில்களை உடைத்துவிட்டு செல்வதும் உண்டு.

சிலர் வாகனங்களில் செல்லும்போதே காலியான மதுபாட்டில்களை சாலையோரம் உள்ள வாய்க்கால், ஓடைகளில் வீசி செல்கின்றனர். அவ்வாறு வீசப்படும் பாட்டில்கள் கற்களில் பட்டு உடைந்து வாய்க்கால்களில் கிடக்கின்றன. இதனால், வயல் வேலைகளில் ஈடுபடும் விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அதேபோல், உழவுத் தொழிலில் ஈடுபடும் கால்நடைகளும், மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளும் கண்ணாடி பாட்டில்களால் காயமுற்று பெரும் துன்பத்தை அடைகின்றன.

ஒவ்வொரு முறையும் பயிர் சாகுபடி செய்யும் முன்பு, தங்களது வயலில் மதுபான பாட்டில்கள் கிடக்கின்றனவா என விவசாயிகள் பார்வையிடும் சூழல் தற்போது உருவாகிவிட்டது. மழைக்காலங்களில் உடைந்த நிலையில் தண்ணீரில் மூழ்கி கிடக்கும் மதுபாட்டில்களால் நடவு பணியில் ஈடுபடும் பெண்கள் முதல் நாற்றுகளை பறிக்கும் ஆட்கள் வரை அனைவரும் கை, கால்களில் ஏற்படும் காயங்களால் பெரும் அவதியை அடைகின்றனர்.

தற்போது கரோனா ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் சில வாரங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், சில மாவட்டங்களை தவிர பல்வேறு மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.

சில வாரங்களாக மது குடிக்காத மதுப்பிரியர்கள், ஒன்றாக கூடி ஆங்காங்கே வயல்பகுதியில் அமர்ந்து மதுவை அருந்தி விட்டு, அப்படியே பாட்டில்களை போட்டுச் சென்றுள்ளதால், பல்வேறு பகுதிகளிலும் தற்போது அதிகப்படியான மதுபாட்டில்களை காணமுடிகிறது.

இதில், சில வகையான பாட்டில்கள் மட்டுமே மறு சுழற்சிக்கு எடுத்துக்கொள்ளப்படும் நிலையில், சில வகையான பாட்டில்கள் ஆங்காங்கே கிடக்கின்றன. எனவே, கண்ணாடி பாட்டில்களுக்கு மாற்று கொண்டு வரவேண்டும் என, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது குறித்து, தேசிய தென்னக நதிகள் இணைப்பு சங்க மாநில செயற்குழு உறுப்பினர் திருமானூரை சேர்ந்த உதயக்குமார் கூறுகையில், "டாஸ்மாக் கடைகளில் உள்ள பார்களில் மட்டுமே மது அருந்த வேண்டும். வெளியில் பாட்டில்களை கொண்டு செல்லக்கூடாது என்ற ஒரு நடைமுறையை கொண்டுவரவேண்டும். அப்படி இல்லையென்றால், மறு சுழற்சி செய்யக்கூடிய, உடையாத வகையில் உள்ள பாட்டில்களில் மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும்.

கண்ணாடி பாட்டில்களால் விவசாயிகள் பலரும் தங்களது கை, கால்களில் காயம் ஏற்பட்டு பெரிய பாதிப்புகளை சந்திக்கின்றனர். அதேபோல், கால்நடைகளும் பாதிக்கப்படுகின்றன. இதற்கு மாற்று ஏற்பாட்டினை அரசு செய்ய வேண்டும். மதுபானங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் குறைவுதான்.

கண்ணாடி பாட்டில்களை தவிர்த்து மறுசுழற்சி செய்யக்கூடிய வகையிலான பிளாஸ்டிக் பாட்டில்களில் மதுபானங்களை வழங்க அரசு உத்தரவிட்டால் எளிதில் இதனை செய்து விடலாம். அந்த நிறுவனங்களுக்கும் கையாளுவதில் பெரும் சிரமம் இருக்காது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகளவு மதுபானங்கள் பிளாஸ்டிக் பாட்டில்களில் கிடைப்பதை காணலாம்" என்றார்.

டாஸ்மாக் கடைகளில் வேலை செய்யும் பணியாளர்கள் கூறுகையில், "கண்ணாடி பாட்டில்களை கையாளுவதில் சிரமம் உள்ளது. லாரி உள்ளிட்ட வாகனங்களில் மதுபானங்கள் கொண்டு வரும் போது சில இடங்களில் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் போது மதுபான பாட்டில் சேதமடைகின்றன. குளிர்பானங்கள் போல் மறு சுழற்சி செய்யக்கூடிய வகையில், பாட்டில்கள் தயார் செய்து அதில் மதுபானங்களை வழங்கினால் அனைவருக்கும் பாதுகாப்பாக அமையும்" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x