Published : 26 Jul 2021 03:12 AM
Last Updated : 26 Jul 2021 03:12 AM

வங்கியிலிருந்து வருவது போன்ற போலி குறுஞ்செய்திகள்: சைபர் க்ரைம் போலீஸார் எச்சரிக்கை

வங்கிகளிலிருந்து அனுப்புவதுபோன்று வரும் குறுஞ்செய்தியின் லிங்க்கை கிளிக் செய்து பணத்தை இழக்க வேண்டாம் என சைபர் க்ரைம் போலீஸார் எச்சரித்துள்ளனர்.

அண்மைக்காலமாக பலரதுசெல்போன்களுக்கு வங்கிகளிலிருந்து வருவதுபோல குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) வருகிறது. அதில், “அன்பான வாடிக்கையாளரே உங்களது வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. அதை புதுப்பித்துக் கொள்ள கேஒய்சி, பான் கார்டு, ஆதார்கார்டு உட்பட மேலும்சில விவரங்களை தெரிந்துகொள்ள இந்த லிங்க்கை (http://6328633cafe2.ngrok.io/bank) திறந்து பாருங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வங்கி வாடிக்கையாளர்கள் இதை உண்மை என்று நம்பி, லிங்க்கை கிளிக் செய்து விடுகின்றனர். அப்படிச் செய்தவுடன் தொடர்புடையவரின் வங்கி விவரம்மோசடிக்காரர்களின் கட்டுக்குள் சென்று விடுகிறது. 10 நிமிடங்களில் அவர்கள் ஆன்லைன் மூலமாக வங்கிக் கணக்கிலிருந்து பணப் பரிவர்த்தனை, பொருட்களை வாங்குவது, ஏடிஎம்மில் பணம் எடுப்பது உள்ளிட்ட பல்வேறு வகைகளில் மோசடி செய்து விடுகின்றனர். இதுபோல பல வங்கிவாடிக்கையாளர்கள் லட்சக்கணக்கான ரூபாயை இழந்துள்ளனர்.

எனவே, பொதுமக்கள் விழிப்புடன் இருந்து, வங்கியிலிருந்து வருவதுபோல லிங்க் எதுவும் செல்போனுக்கு வந்தால் கிளிக் செய்வதை அறவே தவிர்க்க வேண்டும். சந்தேகம் வந்தால் வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கிக்கு நேரில் சென்று விசாரிக்க வேண்டும் என்று சைபர் க்ரைம் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x