

டெல்டா உருமாற்ற வைரஸால்குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்பதற்கு முழுமையான ஆதாரங்கள் இல்லை என்று மருத்துவ ஆராய்ச்சியாளரும், பேராசிரியருமான கலைமதி கூறினார்.
பழம்பெரும் மலேசிய எழுத்தாளர் தமிழ்க்குயில் கலியபெருமாளின் மகள் கலைமதி, ஃப்ளோரிடா சர்வதேச பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். மேலும்,ஹெர்பர்ட் வெர்டெய்ம் மருத்துவக்கல்லூரியில் ஆராய்ச்சியாள ராகவும் பணிபுரிகிறார்.
‘இந்தியாவில் கோவிட்-19 தடுப்பூசிகள், மருந்துகள், கருப்பு பூஞ்சை நோய்’ என்ற தலைப்பில் இணையவழியில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கலைமதி பேசியதாவது:
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தென் அமெரிக்கா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஸ்பெயின், மங்கோலியா, மலேசியா போன்ற நாடுகள் `கரோனா ஹாட் ஸ்பாட்'-ஆக உள்ளன.
கரோனாவால் உலகம் முழுவதும் 41 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில் நாடுகள் முதல் 3 இடங்களில் உள்ளன. இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்படும் 3,265 பேரில் ஒருவர் உயிரிழக்கிறார்.
இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு, மாடர்னா, ஸ்புட்னிக்,ஆக்ஸ்ஃபோர்டு அஸ்ட்ராஜெனிக்கா ஆகிய 5 தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒப்பீட்டு அளவில் மாடர்னா தடுப்பூசி சிறப்பாக செயல்படுகிறது.
டெல்டா வைரஸ், வழக்கமான வைரஸைவிட 6 மடங்கு வேகமாகப் பரவுகிறது. இத்தகைய உருமாற்ற வைரஸை எதிர்த்துப் போராட இஸ்ரேலில் ஊக்கத் தடுப்பூசி (பூஸ்டர்) செலுத்தப்படுகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை டெல்டா வைரஸுக்கு எதிராக கோவாக்சின் 2-வது தவணை தடுப்பூசி 65 சதவீதம் சிறப்பாக செயலாற்றுகிறது அஸ்ட்ராஜெனிகா2-வது தடுப்பூசி 60 சதவீதமும்,மாடர்னா தடுப்பூசி முதல் தவணையிலேயே 72 சதவீதமும்சிறப்பாக செயலாற்றுகிறது. 133 கோடி இந்திய மக்களில் 6.35 சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளனர்.
கருப்பு பூஞ்சை என்பது 10 லட்சம் பேரில் ஒருவருக்கு ஏற்படும் அரிதான நோய் என்றாலும், இந்தியாவில் இந்த விகிதம் 80 சதவீதம்அதிகமாக உள்ளது. கருப்பு பூஞ்சையால் ஆண்களே (79 சதவீதம்) அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
கரோனா குறித்து வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களில் வரும் அனைத்து தகவல்களையும் நம்ப வேண்டாம். டெல்டா உருமாற்ற வைரஸால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்பதற்கு முறையான ஆய்வுகள், ஆதாரங்கள் இல்லை. எனவே, அதுபோன்ற செய்திகளை நம்ப வேண்டாம். எனினும் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.
பேராசிரியர் கலைமதியின் பேச்சை https://www.facebook.com/skcwebinar/videos/4691329510894389 தளத்தில் முழுமையாகக் காணலாம். இந்த நிகழ்ச்சியை, அமெரிக்க தேசிய அறிவியல் நிறுவன திட்ட இயக்குநரும், ஐஐடி குவாஹாட்டி கவுரவப் பேராசிரியருமான தீபங்கர் மேதி தொகுத்து வழங்கினார்.