Published : 02 Jun 2014 08:01 AM
Last Updated : 02 Jun 2014 08:01 AM

மேயர் கார் மோதி இறந்த இளைஞர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

கோவை முன்னாள் மேயர் செ.ம.வேலுச்சாமி கார் மோதியதில் பலத்த காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பனியன் தொழிலாளி சந்திரசேகர் சனிக்கிழமை இரவு உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனைக்கு பின்னர் அவரது சடலம் உறவினர்களிடம் ஞாயிற்றுக் கிழமை ஒப்படைக்கப்பட்டது.

கோவை மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஏ.பி.நாகராஜன் வெற்றி பெற்றார். இவர் பல்லடம் பகுதியில் கடந்த 27-ம் தேதி வாக்காளர்களைச் சந்தித்து நன்றி கூறினார். அப்போது கோவை மேயராகப் பதவி வகித்து வந்த செ.ம.வேலுச்சாமி உடன் சென்றார்.

பின்னர் செ.ம.வேலுச்சாமி காரில் கோவை திரும்பிக் கொண்டிருந்தார். பல்லடம் அருகே உள்ள வெட்டுப்பட்டான்குட்டை பகுதியில் அவரது கார் இருசக்கர வாகனத்தில் வந்த பல்லடத்தைச் சேர்ந்த பால்ராஜின் மகன் சந்திரசேகர் (31) மீது மோதியது.

உயிருக்குப் போராடிய சந்திரசேகரை அப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் கோவை கே.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதை அறிந்த அ.தி.மு.க. தலைமை, கோவை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பதவியை வேலுச்சாமியிடம் இருந்து பறித்தது. மேயர் பதவியில் இருந்து அவர் ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், சந்திரசேகர் சிகிச்சை பலன் இன்றி சனிக்கிழமை இரவு உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்குப் பின்னர் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது. அதைப் பெற்றுக் கொண்ட உறவினர்கள் சந்திரசேகரின் சொந்த ஊரான கொடைக்கானல் அருகே உள்ள கிளாரை கிராமத்துக்கு எடுத்துச் சென்றனர்.

சந்திரசேகரின் மனைவி தேவி. இவர்களுக்கு மூன்று வயது பெண் குழந்தை உள்ளது. தேவி தற்போது 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். கணவர் அடிபட்டு சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டது முதலே அவர் சரிவர சாப்பிடாததைத் தொடர்ந்து சோர்ந்து காணப்பட்டார்.

சந்திரசேகர் இறந்துவிட்டதாக தெரிவித்த பின்னர் அவர் மயக்க மடைந்துவிட்டதாகவும், இதனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

வேலுச்சாமி வரவில்லை

விபத்தின்போது காரில் இருந்த முன்னாள் மேயர் செ.ம.வேலுச் சாமி, சிகிச்சை பெற்று வந்த சந்திரசேகரை பார்க்கவில்லை. அவரது ஆதரவாளர்கள் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினர். ஆனால், சந்திரசேகர் உயிரிழந்த பின்னர் வேலுச்சாமியின் ஆதரவாளர்கள் தொடர்பு கொள்ளவில்லை.

கருணை காட்டுவாரா முதல்வர்?

தேவியின் சகோதரர் பழனிச்சாமி கூறுகையில், எனது தங்கையின் நிலை கவலை அளிப்பதாக உள்ளது. அவரது வாழ்வாதாரத்துக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்கி உதவ வேண்டும். ஆசிரியர் பயிற்சி பட்டப்படிப்பு முடித்துள்ள தேவிக்கு ஆசிரியர் பணி வழங்கி முதல்வர் ஜெயலலிதா கருணை காட்ட வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x