

ஆனைமலை பழைய ஆயக்கட்டு பகுதியில் நெற்பயிர்களை கடித்து நாசம் செய்யும் எலிகளை அழிக்க வேளாண் துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
ஆழியாறு பழைய ஆயக்கட்டு பாசனத்தில், ஆனைமலை கரவெளி பகுதியில், விவசாயிகள் தற்போது முதல் போக நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். நெற்பயிரில் கதிர்விடத் தொடங்கிய நிலையில், தண்டுப் பகுதியை எலிகள் கடித்து நாசம் செய்ய தொடங்கி உள்ளன. இதனால் மகசூல் குறைவதை தவிர்க்க எலிவேட்டையில் விவசாயிகள் இறங்கியுள்ளனர்.
இதுகுறித்து, விவசாயி பட்டீஸ்வரன் கூறும்போது, ‘‘ஒவ்வொரு வயலிலும் நூற்றுக்கணக்கான எலிகள், வரப்புக்கு அடியில் உள்ளன. இந்த எலிகள் நடவு செய்த ஒரு மாதத்தில், நெற்பயிர்களை கடித்து பாலை உறிஞ்சுகின்றன. இதனால் பயிர்கள் விளைச்சல் இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. எலித்தொல்லையால் விவசாயிகளுக்கு சாகுபடியில் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. அதிகம் செலவழித்து கூலி ஆட்களை வைத்து எலிகளை பிடிக்க வேண்டியது உள்ளது’’ என்றார்.
வேளாண் துறையினர் கூறும்போது, ‘‘எலிகளை கட்டுப்படுத்த விவசாயிகள் ஒருங்கிணைந்த தடுப்பு முறைகளைக் கையாள வேண்டியது அவசியம். நடவு பணிகளின்போது, வயல் பரப்பில் காணப்படும் எலி வளைகளை தோண்டி அதில் ஒளிந்து கொண்டிருக்கும் எலிகளை அழிக்க வேண்டும். வரப்புகளை முடிந்தளவு குறுகியதாக அமைக்க வேண்டும். நெற்கதிர் வெளிவரும் தருணத்தில் எலிகளை கட்டுப்படுத்த வறுத்த கம்பு மாவு, சோள மாவு, கேழ்வரகு மாவு மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றுடன் ஜிங் பாஸ்பைடு கலந்து தேங்காய் சிரட்டையில் எலிகள் நடமாட்டம் அதிகம் காணப்படும் பகுதியில் வைக்க வேண்டும். இதனால் எலிகளை அழிக்கலாம்” என்றனர்.