

தாம்பரம் - கூடுவாஞ்சேரி இடையே 3-வது புதிய பாதையில் அடுத்த மாதம் முதல் ரயில் சேவை தொடங்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கத்தில் தினமும் 280 மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில், 170 ரயில் சேவைகள் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. மாநகரின் எல்லைப் பகுதிகள் விரிவடைந்துள்ளதால், மின்சார ரயில்களை செங்கல்பட்டு வரை அதிகரித்து இயக்கும் வகையில், தாம்பரம் - செங்கல்பட்டு இடையே சுமார் 30 கி.மீ தூரத்துக்கு 3-வது பாதை அமைக்கும் பணிகள் கடந்த 2016-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன.
ரூ.256 கோடியில் 3 கட்டமாக பணிகள் நடைபெற்று வருகின்றன. செங்கல்பட்டு - சிங்கப்பெருமாள் கோவில், சிங்கப்பெருமாள் கோவில் - கூடுவாஞ்சேரி வரை புதிய பாதை அமைக்கப்பட்டு, தற்போது இந்த தடத்தில் ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து, கூடுவாஞ்சேரி - தாம்பரம் இடையே 3-வது புதிய பாதை பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.
இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘சென்னை புறநகர் பகுதியான தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வரை, ரயில் போக்குவரத்து தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. தாம்பரத்தில் இருந்து கூடுதல் ரயில்களை இயக்கும் வகையில் தாம்பரம் - செங்கல்பட்டு இடையேயான 3-வது புதிய ரயில் பாதையை அமைத்து வருகிறோம். இதில், கூடுவாஞ்சேரி - செங்கல்பட்டு வரை பணிகள் நிறைவுபெற்று, ரயில்களின் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள முக்கிய இணைப்பு பணியான கூடுவாஞ்சேரி - தாம்பரம் இடையேயான ரயில் தண்டவாளம் அமைக்கும் பணிகளும் முடிந்துள்ளன. எஞ்சியுள்ள சில பணிகளை அடுத்த ஒரு வாரத்தில் நிறைவு செய்வோம். அதன்பிறகு, ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கொண்ட குழுவினர் வந்து ஆய்வு செய்து, ஒப்புதல் அளிப்பார்கள். அதன்பிறகு, இந்த தடத்தில் ரயில் சேவையைத் தொடங்குவோம். அடுத்த மாதம் இந்த தடத்தில் ரயில் சேவை தொடங்கும்போது, தாம்பரம் - செங்கல்பட்டு வரை கூடுதல் ரயில்களை இயக்க முடியும்’’ என்றனர்.
ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கொண்ட குழுவினர் வந்து ஆய்வு செய்து, ஒப்புதல் அளிப்பார்கள். அதன்பிறகு, இந்த தடத்தில் ரயில் சேவையைத் தொடங்குவோம்.