பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்த மரங்கள் மாயம்: செங்கல்சூளைக்கு அனுப்பப்பட்டதா?

மரங்களை வெட்டி அதன் சுவடு தெரியாமல் இருக்க வேரோடு எரித்துள்ளனர்.
மரங்களை வெட்டி அதன் சுவடு தெரியாமல் இருக்க வேரோடு எரித்துள்ளனர்.
Updated on
1 min read

பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்த மரங்கள் திடீரென மாயமாகியிருப்பதோடு, அவைகள் கரோனா பொதுமுடக்க காலத்தில் வெட்டப்பட்டு செங்கல் சூளைக்கு அனுப்பபட்டதாகக் கூறப்படுகிறது.

பண்ருட்டி கெடிலம் ஆற்றுக் கரையோரம் சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் வட்டாட்சியர் அலுவலகம் இயங்கிவருகிறது. அலுவலக வளாகத்தின் கிழக்குப் பகுதியில் இருந்த 50 ஆண்டுகால புளியமரம், இலுப்பை மரம், பனைமரம் உள்ளிட்டவை திடீரென மாயமாகியிருந்ததோடு, ஆற்றை ஒட்டிய பகுதியில் மண்ணும் வெட்டப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அலுவலக ஊழியர்களிடம் விசாரித்தபோது, "அலுவலகத்தின் சுற்றுப்புறத்தில் கருவேல மரங்கள் இருந்தன. அவற்றையெல்லாம் வெட்டி சுத்தம் செய்தனர். ஆனால் மரங்கள் என்னவானது என தங்களுக்குத் தெரியாது" என்று தெரிவித்தனர். இதையடுத்து பெயர் கூற விரும்பாத ஊழியர் ஒருவர் கூறுகையில்," கடந்த ஜூன் மாதம் கரோனா பொதுமுடக்கத்தின் போது, மரங்கள் வெட்டப்பட்டு 16 லாரிகளில் கொண்டு செல்லப் பட்டன.

மரங்கள் வெட்டிய இடத்தில் அவற்றின் சுவடு தெரியாமல் இருக்க வேரோடு பிடுங்கி எரித்துள்ளனர். மேலும் சுமார் 30 லாரிகளில் மண்ணும் வெட்டப்பட்டு செங்கல் சூளைகள் அதிகமுள்ள குச்சிப்பாளையத்திற்கு கொண்டு சென்று விட்டனர்" என்று தெரி வித்தார்.

மரங்கள் வெட்ட உரிய காரணங்களுடன் வட்டாட்சியர் அனுமதிக்க வேண்டும். அவ்வாறு அனுமதித்தப் பின் முறையாக ஏலம் விடப்பட்டு அதன்பின்னரே அங்கிருந்து அகற்றப்படவேண்டும் என அரசின் வழிகாட்டுதல் உள்ளது.

மரங்கள் வெட்டப்பட்டிருந்தால், அரசின் வழிகாட்டுதல் பின்பற் றப்பட்டதா? அல்லது மர்ம நபர்கள் யாரேனும் வெட்டிச் சென்றனரா? என்பது குறித்து அறிய பண்ருட்டி வட்டாட்சியர் பிரகாஷை அவரது செல்போனில் பலமுறை தொடர்பு கொண்டும் அவர் பேச முன்வரவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in