

மாணவர்களுக்கு நீர்வள பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் போட்டிகளை, மத்திய நிலத்தடி நீர் வாரியம் இந்த ஆண்டு புதுமையாக நீர்நிலைகளைத் தேடி, அதன் அருகில் நடத்தி வருகிறது.
நாட்டில் நிலத்தடி நீராதாரத்தை பெருக்குவது, அதை சீரமைப்பது போன்ற பணிகளில் மத்திய நிலத்தடி நீர் வாரியம் செயல்படுத்தி வருகிறது. வருங்கால இந்தியாவை உருவாக்கும் மாணவர்களிடையே நீராதாரத்தை பெருக்குவது, நீரை சேமிப்பது, மறுசுழற்சி செய்வது குறித்த சிந்தனைகளை ஊக்குவிக்கும் நோக்கில் இவ்வாரியம் சார்பில் கடந்த 2010-ம் ஆண்டு முதல் 6,7,8 ஆகிய வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்கும் தேசிய அளவிலான ஓவியப் போட்டிகளை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இப்போட்டிகள் பள்ளிகள், மாநில மற்றும் தேசிய அளவில் என 3 நிலைகளில் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு புதுமையாக, நீர்வள பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு போட்டிகளை, நீர்நிலைகளைத் தேடி, அதன் அருகில் நடத்தி வருகிறது.
இது தொடர்பாக, மத்திய நிலத்தடிநீர் வாரியத்தின் தென் மண்டல இயக்குநர் அ.சுப்புராஜிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:
இந்த ஆண்டு நிலத்தடிநீர் மாசுபடுதல் மற்றும் அதன் விளைவுகள், புனிதமான ஆறு, ஆறு மற்றும் நீர்நிலைகள் மாசுபடுவதை தடுத்தல் ஆகிய தலைப்புகளில் நாடு முழுவதும் பள்ளிகள் அளவில் கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன. தமிழகத்தில் 3 ஆயிரத்து 337 பள்ளிகளைச் சேர்ந்த 2 லட்சத்து 70 ஆயிரத்து 783 மாணவர்கள் பங்கேற்றனர். அதில் 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு, நீர்நிலை பாதுகாப்பு விழிப்புணர்வு போட்டிகளை, நீர்நிலைகளின் அருகில் தான் நடத்த வேண்டும். அப்போது தான் மாணவர்கள் மனதில் ஆழமாக பதியும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
அதனால் புதுச்சேரியில் நடைபெற்ற, யூனியன் பிரதேச அளவிலான போட்டியை, வழுதாவூர் சாலையில் அமைந்துள்ள, பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ள, கடல் போல் நீர் நிறைந்திருக்கும் உசுடு ஏரிக் கரையில் கடந்த மாதம் ஓவியப் போட்டியை நடத்தினோம். அதில் 126 பள்ளிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 50 மாணவர்கள் பங்கேற்றனர். இது மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள 50 மாணவர்கள் பங்கேற்கும் மாநில அளவிலான ஓவியப் போட்டி, தஞ்சாவூர் மாவட்டத்தில் கல்லணையில் உள்ள காவிரி ஆற்றின் கரையில் நடத்தப்பட்டது. இப்போட்டிகளில் முதல் பரிசு பெறும் மாணவருக்கு ரூ.5 ஆயிரம் பரிசு வழங்கப்படுவதுடன், தேசிய அளவிலான போட்டியிலும் பங்கேற்பார் என்றார்.