

தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளுடன் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை, மீன்வளத் துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால், இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதி வழங்க வலியுறுத்தி, சென்னை, கடலூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் மீனவர்கள் பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நாகை நம்பியார் நகர் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று 8 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் செல்வதற்காக, லாரியில் சுருக்குமடி வலைகளை ஏற்றிக்கொண்டு, கடற்கரை நோக்கி வந்தனர். இதுகுறித்து தகவலறிந்த மீன்வளத் துறை அதிகாரிகள், நம்பியார் நகர் மீனவ கிராமத்துக்குச் சென்று, “அரசு அனுமதி வழங்கும் வரை மீனவர்கள் சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்கக் கூடாது” எனக்கூறி தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து, மீன்வளத் துறை அதிகாரிகளுக்கும், மீனவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், எந்தவித அசம்பாவிதமும் நேரிடாமல் இருக்க அப்பகுதியில் பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து, நீண்ட நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், கோட்டாட்சியர் மணிவேல், வட்டாட்சியர் ஜெயபாலன் ஆகியோரும் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, “ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேரடியாகவும், 5 ஆயிரம் மீனவர்கள் மறைமுகமாகவும் சுருக்குமடி வலைகளை நம்பி உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதி வழங்க வேண்டும்” என மீனவர்கள் வலியுறுத்தினர். அதற்கு, அரசிடம் பேசி 2 நாட்களுக்குள் நல்ல முடிவெடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் அமைதியாக கலைந்து சென்றனர். தொடர்ந்து, போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.