Published : 26 Jul 2021 03:14 AM
Last Updated : 26 Jul 2021 03:14 AM

பேய்குளத்தை ஆக்கிரமித்துள்ள அமலைச் செடிகள்: விவசாயப் பணிகளுக்கு பெரும் இடையூறு

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகேயுள்ள பேய்குளத்தில் தண்ணீரே தெரியாத அளவுக்கு ஆக்கிரமித்துள்ள அமலைச் செடிகளால் விவசாயிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி பாசன பகுதிகளுக்கு 25 ஆண்டுகளுக்கு பிறகு, இந்த ஆண்டு கார் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 1-ம் தேதி அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், மாவட்டத்தில் தாமிரபரணி பாசனத்தில் உள்ள மருதூர் மேலக்கால், கீழக்கால், ஸ்ரீவைகுண்டம் வடகால், தென்கால் ஆகிய 4 பிரதான கால்வாய்களிலும் கார் பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. விவசாயிகள் மகிழ்ச்சியாக கார் சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை சுமார் 4,000 ஹெக்டேர் பரப்பில் நெல் நடவு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

ஆனால், கால்வாய்கள் மற்றும் குளங்களில் அமலைச் செடிகள் அதிகளவில் வளர்ந்திருப்பதால் போதுமான அளவில் தண்ணீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சாயர்புரம் அருகேயுள்ள பேய்குளம் முழுமையாக அமலைச் செடிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. சுமார் 2,500 ஏக்கர் பாசன பரப்பை கொண்டுள்ள இந்த குளத்தை நம்பி சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் உள்ளனர். இந்த பகுதியில் சுமார் 400 ஏக்கரில் நெல் சாகுபடி செய்துள்ளனர். மீதமுள்ள இடங்களில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பேய்குளத்தில் தண்ணீரே தெரியாமல் பச்சை போர்வை போர்த்தியது போல அமலைச் செடிகள் ஆக்கிரமித்து வளர்ந்துள்ளன.

இதுகுறித்து இந்த குளத்து பாசனத்தில் நெல் நடவு செய்துள்ள சிவத்தையாபுரத்தைச் சேர்ந்த பி.ராஜன் என்ற விவசாயி கூறியதாவது: குளத்தில் இந்த ஆண்டு தண்ணீர் தேங்கியிருப்பதால் உற்சாகமாக நெல் நடவு பணிகளை மேற்கொண்டுள்ளோம். வைகுண்டம் அணையில் இருந்து வடகாலில் தண்ணீர் நேராக பேய்குளத்துக்கு தான் வருகிறது. எனவே, அணைப் பகுதியில் இருந்த அமலைச் செடிகள் அனைத்தும் அடித்துவரப்பட்டு பேய்குளம் குளத்தை ஆக்கிரமித்துள்ளன.

அமலைச் செடிகள் ஆக்கிரமித்துள்ளதால் தண்ணீரை முழு அளவில் தேக்கி வைக்க முடியவில்லை. இருக்கும் தண்ணீரும் மிக வேகமாக குறைந்துவிடுகிறது. தற்போது தான் நெல் நடவு செய்துள்ளோம். அக்டோபர் மாதம் வரை தண்ணீர் தேவை. ஆனால் அமலைச் செடிகள் ஆக்கிரமிப்பு காரணமாக அக்டோபர் வரை தண்ணீர் இருப்பு இருக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. நெல் பயிர் முதிர்ச்சியடையும் நேரத்தில் தண்ணீர் தட்டுப்பாடு வந்துவிட்டால் பெரும் நஷ்டம் ஏற்படும்.

அமலைச் செடிகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அமலைச் செடி களில் இருந்து மதிப்புக் கூட்டு பொருட்கள் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக அறிகிறோம். அந்த திட்டத்தை விரைவாக செயல்படுத்தி அமலைச் செடிகளை விரைவாக அகற்ற வேண்டும் என்றார் அவர்.

மகளிர் குழுவுக்கு பயிற்சி

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, “அமலைச் செடிகள் பிரச்சினைக்கு தீர்வு காணவே, அமலைச் செடிகளில் இருந்து மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும். அப்போது குளங்கள், நீர்நிலைகளில் உள்ள அமலைச் செடிகள் அகற்றப்படும். இதனைத் தவிர பொதுப்பணித்துறை சார்பில் நீர் நிலைகளில் உள்ள அமலைச் செடிகளை அவ்வப்போது அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x