

ஆசாரிபள்ளம் அருகே சேனாப்பள்ளி சந்திப்பு பகுதியில் நெடுஞ்சாலையில் உருவான புதைகுழி ‘இந்து தமிழ்’ செய்தி எதிரொலியாக சீரமைக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம்-இரணியல் நெடுஞ்சாலை பகுதியான சேனாப்பள்ளி சந்திப்பில் ஊச்சிவாய்க்கால் ஓடை பாசனக் கால்வாய் சீரமைப்பு பணி சமீபத்தில் நடந்தது. இதற்காக சாலை குறுக்காக தோண்டப்பட்டது.
கால்வாய் சீரமைப்பு பணி முடிந்த பின்னர் சாலையில் மண் கொட்டி நிரப்பி அவ்வழியாக வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. இந்நிலையில் மழையால் அப்பகுதியில் கொட்டப்பட்ட மண் தாழ்ந்து புதைகுழி போல் மாறியது. இதனால் அவ்வழியாக இருசக்கர வாகனங்களில் பயணித்த பலர், நிலைதடுமாறி விழுந்து காயம் அடைந்தனர். கார், டெம்போ, லாரி உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் நெடுஞ்சாலை பள்ளத்தில் உள்ள சேற்றில் சிக்கி விபத்துகள் ஏற்பட்டன.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழில் கடந்த 23-ம் தேதி படத்துடன் செய்தி வெளி யிடப்பட்டது. இதன் எதிரொலியாக மறுநாளே ஜல்லி கற்களுடன் மணல் கலந்த கிராவல், லாரிகளில் கொண்டு வரப்பட்டு, பள்ளமான இடத்தில் கொட்டி சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
அப்போது கனமழை கொட்டிய தால் பணி சற்று தடைபட்டது. இருந்த போதும் இரவு பகலாக பணிகளை மேற்கொண்டு நெடுஞ்சாலைத்துறையினர் சாலையை சீரமைத்தனர். இதைத் தொடர்ந்து மீண்டும் அவ்வழியாக வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. ராஜாக்கமங்கலம்- இரணியல் நெடுஞ்சாலையில் போக்குவரத்து சீரானதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இருவாரத்துக்கு பின்னர் அப்பகுதியில் தார் அல்லது காங்கிரீட் கலவை மூலம் சாலை மேலும் செம்மைப்படுத்தப்படும் என நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.