Published : 26 Jul 2021 03:14 AM
Last Updated : 26 Jul 2021 03:14 AM

சட்டப்பேரவை தேர்தலை போலவே உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களையும் கைப்பற்ற வேண்டும்: வேலூர் மத்திய மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

வேலூர் மத்திய மாவட்ட திமுக சார்பில் நடந்த செயற்குழு கூட்டத்தில் பேசும் அமைச்சர் துரைமுருகன். அருகில், அமைச்சர் ஆர்.காந்தி, எம்.பி.,க்கள் ஜெகத்ரட்சகன், கதிர்ஆனந்த், மாவட்ட செயலாளரும் எம்எல்ஏவுமான ஏ.பி.நந்தகுமார் உள்ளிட்டோர்.

வேலூர்

சட்டப்பேரவை தேர்தலைப் போலவே உள்ளாட்சி மன்ற தேர்தலிலும் திமுக அனைத்து இடங்களையும் கைப்பற்ற கட்சியினர் பாடுபட வேண்டும் என மாவட்ட செயற்குழுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வேலூர் மத்திய மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயற் குழுக்கூட்டம் வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே நேற்று நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் முகமதுசகி தலைமை வகித்தார். வேலூர் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினருமான ஏ.பி.நந்தகுமார் முன்னிலை வகித்தார்.

திமுக பொதுச்செயலாளரும் தமிழக நீர்வளத்துறை, கனிமம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சரு மான துரைமுருகன், கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெறுவதற்கான வியூகம் குறித்து பேசினர்.

இதைத்தொடர்ந்து, நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக அதிக இடங்களை கைப்பற்றி, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்றதற்கு நன்றி தெரிவித்தும், விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற தேர்தலில் வேலூர் மத்திய மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து அமைப்புகளான ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றியக்குழு தலைவர், ஒன்றியக்குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மற்றும் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆகிய பொறுப்பு பதவிகளுக்கு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய திமுகவினர் பாடுபடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில், நாடாளு மன்ற உறுப்பினர்கள் ஜெகத்ரட்சகன் (அரக்கோணம்), கதிர்ஆனந்த்(வேலூர்), சட்டப்பேரவை உறுப்பினர்கள் கார்த்திகேயன் (வேலூர்), அமலுவிஜயன் (குடி யாத்தம்), மாவட்டப் பொருளாளர் நரசிம்மன், துணை செயலாளர்கள் ஆர்.பி.ஏழுமலை, மலர்விழி மற்றும் நகர, பேரூராட்சி, ஒன்றிய, பகுதிச் செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x