

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை விரைவில் முதல்வர் தொடங்கி வைக்கவிருப்பதாகவும், கிருஷ்ணகிரி அல்லது தருமபுரி மாவட்ட கிராமத்திலிருந்து இத்திட்டம் தொடங்கி வைக்கப்படும் என்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சைதை மேற்கு பகுதி 140வது வட்ட திமுக சார்பில் 5300 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சிக்குப்பிறகு அமைச்சர், செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
முகக்கவசம் அணிவது ஒன்றுதான் கரோனா தொற்றை தடுப்பதற்கு ஒரே தீர்வு. ஏற்கெனவே திமுக சார்பில் சட்டப்பேரவையில் இலவசமாக முகக்கவசங்கள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. கடந்த ஆட்சியாளர்கள் முகக்கவசங்கள் தேவையில்லை என்று மறுத்துவிட்டார்கள். பிறகு வருவாய்த் துறை மூலம் வழங்கினார்கள். அந்த முக்கவசங்கள் மூலம் எந்தவிதமான உபயோகமும் இல்லை என்பது பிறகு கண்டறியப்பட்டது. அது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தனியார் நிறுவனங்களின் சிஎஸ்ஆர்.நிதி பங்களிப்பு என்பது 5 கோடி அளவில் நிதி சேர்ந்திருக்கிறது. இந்தியாவிலேயே முதன்முறையாக தனியார் நிறுவனங்களின் சிஎஸ்ஆர் நிதி மூலம் தனியார் மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தும் திட்டத்தினை தமிழக முதல்வர் வருகிற புதன்கிழமை காலை 10 மணிக்கு ஆழ்வார்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் தொடங்கி வைக்கிறார்கள். இத்திட்டத்தின் மூலம் முதலாவதாக ஆழ்வார்பேட்டையில் உள்ள பொதுமக்கள் பயனடைய இருக்கின்றனர். அதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தனியார் நிறுவனங்களின் சிஎஸ்ஆர் நிதி பங்களிப்போடு தனியார் மருத்துவமனைகளில் இலவச கரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்படவிருக்கின்றன. ஒவ்வொரு தனியார் மருத்துவமனையும், எந்த தனியார் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர். நிதியின் கீழ் எவ்வளவு தடுப்பூசிகள் செலுத்தப்படவிருக்கின்றன என்ற விவரம் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடம் விளம்பரப்படுத்தப்படும்.
பல்வேறு மிகப் பெரிய தொழில் நிறுவனங்கள் சார்பிலும் தடுப்பூசிகள் செலுத்தப்படவிருக்கிறது. தனியார் மருத்துவமனைகளில் கோவிஷீல்டு ரூ.780 ரூபாய்க்கு செலுத்துகிறார்கள். இப்படி பல்வேறு பகுதிகளில் இருக்கிற தொழில் நிறுவனங்களில் பணியாற்றுகிற பணியாளர்களுக்கும் தனியார் நிறுவனங்களின் சிஎஸ்ஆர் நிதி மூலம் அப்பகுதியில் இருக்கிற தனியார் மருத்துவமனைகளின் ஒதுக்கப்படும் 25 சதவிகித தடுப்பூசி தொகுப்பினைப் பயன்படுத்த இருக்கின்றனர்.
கோவையில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் போன்ற 4 மாவட்டங்களில் உள்ள தனியார் நிறுவனங்களின் சிஎஸ்ஆர் நிதி பங்களிப்பு குறித்தக் கூட்டத்தில் 117 மருத்துவமனை நிர்வாகங்கள் பங்கேற்றனர். அதற்கு பிறகு சென்னையில் நடைபெற்ற சென்னை, திருவள்ளூர், இராணிப்பேட்டை, செங்கல்பட்டு, வேலூர்,காஞ்சிபுரம், திருப்பத்தூர் ஆகிய 8 மாவட்டங்களில் உள்ள தனியார் நிறுவனங்கள் பங்கேற்ற கூட்டங்களில் 137 பிரதிநிதிகள் பங்கேற்றனர். பெரிய அளவிலான மருத்துவமனை நிர்வாகங்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்தும் திட்டத்தைத் தொடங்குவதற்கு அறிவித்துள்ளனர்.
மக்களைத் தேடி மருத்துவம் என்கிற திட்டம், உலகத்திற்கே ஒரு முன்னுதாரணமாக இருக்கும். தமிழகத்தில் இருக்கிற ஒட்டுமொத்த மக்களுக்கும் எத்தனை நோய்கள் இருக்கிறது என்பதை கண்டுபிடித்து, அந்நோய் உள்ளவர்களின் வீடுகளுக்கே சென்று மருத்துவம் பார்ப்பது, இலவசமாக மருந்துகளை அளிப்பது இத்திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தை தமிழக முதல்வர்தொடங்கி வைக்க இருக்கிறார். அதற்காக நானும், துறையின் செயலாளரும், துறையின் அலுவலர்களோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி
மாவட்டங்களுக்குச் சென்று இத்திட்டம் தொடங்கி வைக்கப்படும் இடத்தை ஆய்வு செய்து தேர்வு செய்ய இருக்கிறோம். ஏதாவது ஒரு கிராமத்தில் இத்திட்டம் தொடங்கி வைக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.