Published : 25 Jul 2021 17:36 pm

Updated : 25 Jul 2021 17:36 pm

 

Published : 25 Jul 2021 05:36 PM
Last Updated : 25 Jul 2021 05:36 PM

பாகுபாடின்றி அனைத்து மாவட்ட மக்களுக்கும் அனைத்து தேவைகளும் கிடைக்க நடவடிக்கை: அமைச்சர் கே.என்.நேரு உறுதி

minister-k-n-nehru-interview-in-madurai
கரோனாவால் பாதிக்கப்பட்டு பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைக்கு நிவாரண நிதி வழங்குகிறார் அமைச்சர் கே.என்.நேரு. உடன் அமைச்சர்கள் உள்ளிட்டோர்.

திருச்சி

முன்னேறிய மாவட்டம், பின்தங்கிய மாவட்டம் என்ற பாகுபாடின்றி இன்றி, அனைத்து மாவட்ட மக்களுக்கும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் உட்பட அனைத்து தேவைகளும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் மாநில நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேருதெரிவித்துள்ளார்.


திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஆகிய துறைகளில் தற்போதைய வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது.

கலையரங்க மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு வரவேற்றார். மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல்- இளைஞர் நலத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்தக் கூட்டத்தின்போது, கரோனாவால் பாதிக்கப்பட்டு பெற்றோரில் யாரேனும் ஒருவரை இழந்த 2 குடும்பங்களைச் சேர்ந்த 4 குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சம் வீதம் நிவாரண நிதியும், பணிக் காலத்தில் உயிரிழந்த அங்கன்வாடி மைய ஊழியர்கள் 5 பேரின் வாரிசுதாரர்களுக்கும், ஆதி திராவிடர் நலத் துறை ஊழியர் ஒருவரின் வாரிசுதாரருக்கும் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் வழங்கினர்.

நகராட்சி நிர்வாகம்- குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, பேரூராட்சிகள் இயக்குநர் ரா.செல்வராஜ், குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் வி.தட்சிணாமூர்த்தி, நகராட்சிகள் நிர்வாக இயக்குநர் ப.பொன்னையா ஆகியோர் திட்ட விளக்கவுரையாற்றினர்.

ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு கூறியது:

டெல்டா பகுதியில் உள்ள 8 மாவட்டங்களைச் சேர்ந்த உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் மற்றும் 8 மாவட்டங்களைச் சேர்ந்த எம்எல்ஏ-க்கள், எம்பி-க்கள் உள்ளிட்டோர் ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அவர்கள் பேசும்போது குடிநீர் வசதி, சாலை வசதி, புதை சாக்கடைத் திட்டம், பொழுதுபோக்கு பூங்கா, பழுதடைந்த நிலையில் உள்ள கட்டிடங்களைச் சீரமைப்பது, உள்ளாட்சி அமைப்பின் பரப்பை விரிவுபடுத்த வேண்டும் என தொகுதிக்குத் தேவையான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

அனைத்து கோரிக்கைகளும் குறிப்பெடுக்கப்பட்டு, பணிகளை விரைவாக முடிக்கவும், பணிகளை விரைவாக முடிப்பதில் உள்ள சிரமங்களைக் களைய உரிய நடவடிக்கை எடுக்கவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக, புதை சாக்கடைத் திட்டம், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, சாலை வசதி ஆகிய கோரிக்கைகளை பெரும்பாலானோர் வலியுறுத்தினர்.

கடந்த ஆட்சிக் கலத்தில் புதை சாக்கடைகளை முறையாக பராமரிக்கவில்லை. சில இடங்களில் உடைப்புகளைச் சீரமைக்காததால் குடிநீருடன் கழிவுநீர் கலக்கும் நிலை உள்ளது. இதையெல்லாம் கண்டறிந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் குறைபாடுகள் விரைவாக களையப்பட்டு, மக்கள் அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

திருச்சியில் பறக்கும் சாலை சாலை அமைக்கும் திட்டத்துக்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதேபோல், மறைந்த முதல்வர் மு.கருணாநிதி ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டு, 48 ஆண்டுகள் ஆன காவிரி பாலத்தை கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் உடைத்து சின்னாபின்னமாக்கி விட்டனர். இதனால், அந்தப் பாலத்தின் பலம் குறைந்துவிட்டது. எனவே, அங்கு புதிய பாலம் கட்டும் திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணியும் தொடங்கப்படவுள்ளது.

முன்னேறிய மாவட்டம் பின்தங்கிய மாவட்டம் என எந்தப் பாகுபாடும் இல்லாமல் அனைத்து மாவட்ட மக்களுக்கும் பாதுகாக்கப்பட்டு குடிநீர் உட்பட அனைத்து வசதிகளும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நகர்ப்புறங்களில் உள்ள வசதிகள் கிராமப்புற மாவட்டங்களிலும் ஏற்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும்.

திருச்சி கோணக்கரையில் உள்ள நாய்கள் கருத்தடை சிகிச்சை மையத்தை மீண்டும் செயல்படுத்துவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை மாநகராட்சியில் சாலைகள் அமைக்க விடுப்பட்ட டெண்டர் ரத்து செய்யப்பட்ட காரணம் குறித்து ஆய்வு செய்து, அதேபோல் மற்ற மாநகராட்சிகளிலும் விடப்பட்ட டெண்டர்களில் ஏதேனும் குளறுபடிகள் இருப்பது தெரிய வந்தால் அந்த டெண்டர்களும் ரத்து செய்யப்பட்டு புதிய டெண்டர்கள் விடப்படும்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அதிமுக ஆட்சிக் காலத்தில் 80 சதவீதத்தைச் செலவழித்துவிட்டனர். நிறைவடையாத பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி ஜங்ஷன் பகுதியில் நிறைவடையாமல் உள்ள மேம்பாலப் பணிகளை மாநகராட்சி நிர்வாகமே நேரடியாக எடுத்து மேற்கொள்ள உள்ளது. மேம்பாலப் பணிக்குத் தேவையான ராணுவ இடத்துக்கு இணையான நிலத்தை அளிப்பது தொடர்பாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து விரைவில் ஒப்புதல் கிடைத்துவிடும். மேம்பாலமும் கட்டி முடிக்கப்படும்.

திருச்சி மாநகராட்சியை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற சட்டப்பேரவை உறுப்பினர்களின் விருப்பத்தை முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளோம். பெரிய ஊராட்சிகளை மட்டும் இணைக்க திட்டமிப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்துக்கு முதல்வர் இசைவு தெரிவித்தால் விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடங்கப்படும். மாநகராட்சியுடன் இணைவதற்கு விருப்பம் இல்லாத பகுதிகளை கட்டாயப்படுத்தப்போவதில்லை.

தவறு செய்திருப்பதாக தெரிய வந்ததால்தான் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு தொடர்புள்ள இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் இறுதியாக நீதின்றம்தான் முடிவு செய்யும்" என்றார்.


தவறவிடாதீர்!

அமைச்சர் கே.என்.நேருஅனைத்து மாவட்ட மக்கள்வளர்ச்சிப் பணிகள்தமிழக முதல்வர்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x