

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். இதைத்தொடர்ந்து, இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் இன்று இரவு டெல்லி புறப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஓ.பன்னீர்செல்வம் இன்று (ஜூலை 25) காலை 10 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டார். அவரை அதிமுகவினர் வழியனுப்பி வைத்தனர். அவருடன் அதிமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியனும் உடன் சென்றுள்ளார். எவ்வித முன்னறிவிப்புமின்றி, ஓபிஎஸ் டெல்லி புறப்பட்டது பல்வேறு கேள்விகளை அரசியல் வட்டாரத்தில் எழுப்பியுள்ளது.
இந்நிலையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியும் இன்று இரவு டெல்லி செல்வதாகவும், அவருடன் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட ஒருசிலரும் உடன் செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டத்தில் உள்ளார். அவர் கோவை சென்று அங்கிருந்து டெல்லி செல்ல உள்ளார்.
அதிமுகவினருடன் சசிகலா சமீபகாலமாக போனில் பேசி வருகிறார். தொலைக்காட்சி நேர்காணல்களிலும் பங்கேற்று வருகிறார். இந்த விவகாரம், சமீபகாலமாக அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மேலும், தோப்பு வெங்கடாச்சலம் உள்ளிட்ட அதிமுகவின் முக்கிய தலைவர்கள் சமீபகாலமாக திமுகவில் இணைந்துவருகின்றனர்.
இதுமட்டுமல்லாமல், பாஜக கூட்டணி குறித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதும் சர்ச்சையைக் கிளப்பியது.
இந்நிலையில், தமிழக அரசியல் சூழல், சசிகலா விவகாரம், மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் அதிமுகவுக்கு இடம்தராதது, உள்ளாட்சித் தேர்தல், மேகதாது அணை விவகாரம் குறித்து இருவரும், பிரதமர் மோடியை சந்தித்துப் பேசவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இருவரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்திப்பார்கள் எனத் தெரிகிறது.