

ஜோலார்பேட்டை அருகே பெண் காவல் ஆய்வாளரிடம் இருந்து தங்கச்சங்கிலியை அபகரித்துச்சென்ற மர்ம நபர் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த சின்னகம்மியம்பட்டு தாசரிவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சம்பத் (49). இவர் அதேபகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி புனிதா (44). இவர் திருப்பத்தூர் மாவட்ட க்யூ பிரான்ச் பிரிவு ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன் பரோலில் ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் தங்கியுள்ளதால், அங்கு பாதுகாப்புப்பணியை புனிதா கூடுதலாக கவனித்து வந்தார்.
நேற்றிரவு 11 மணிக்கு (ஜூலை 24) பணியை முடித்துவிட்டு, இருசக்கர வாகனத்தில் புனிதா தன் வீட்டுக்கு புறப்பட்டார். சின்னகம்மியம்பட்டு கிராம நிர்வாக அலுவலகம் அருகே சென்றபோது எதிரே மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் புனிதா மீது வாகனத்தை மோதுவது போல் பாசாங்கு காட்டி அவரை நிலைகுலைய செய்தார்.
புனிதா இருசக்கர வாகனத்தில் தடுமாறிய கனநேரத்தில் அவரது கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் எடையுள்ள தங்கச்சங்கிலியை அபகரித்துக்கொண்டு மர்ம நபர் அங்கிருந்து தப்பியோடினார். இதைத்தொடர்ந்து, செய்வதறியாமல் நடுஇரவில் தவித்த புனிதா நேராக வீட்டுக்கு சென்றார்.
பிறகு ஜோலார்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் லட்சுமியை தொடர்பு கொண்டு நடந்த விவரத்தை புனிதா கூறினார். அதன்பேரில், அங்கு விரைந்து வந்த ஜோலார்பேட்டை காவல் துறையினர் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
இது குறித்து தகவல் கிடைத்ததும், திருப்பத்தூர் காவல் கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி நேரில் வந்து விசாரணை நடத்தினார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து பெண் காவல் ஆய்வாளரிடம் தங்கச்சங்கிலியை பறித்துச்சென்ற மர்ம நபர் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி 'இந்து தமிழ் திசை' இணையதளத்திடம் கூறுகையில், "பெண் காவல் ஆய்வாளரிடம் தங்கச்சங்கிலி பறித்துச்சென்றவர்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. நகைப்பறிப்பு சம்பவம் நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு சில துப்புகள் கிடைத்துள்ளன.
இது தொடர்பாக 4 பேர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. அவர்களை பிடித்து விசாரணை நடத்த ஆலோசித்து வருகிறோம். விரைவில் நகைப்பறிப்பில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்யப்படுவார்கள்" என்றார்.