Published : 16 Feb 2016 08:20 PM
Last Updated : 16 Feb 2016 08:20 PM

அனைத்துத் துறைகளிலும் படுதோல்வி அடைந்ததை இடைக்கால பட்ஜெட் காட்டுகிறது: வைகோ

அனைத்துத் துறைகளிலும் படுதோல்வி அடைந்து இருப்பதைத்தான், 2016 - 2017 இடைக்கால நிதிநிலை காட்டுகிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால நிதிநிலை அறிக்கை, ஐந்து ஆண்டு கால அதிமுக ஆட்சியின் செயல்பாடுகளுக்காகத் தம்மைத் தாமே பாராட்டிக்கொள்கின்ற தம்பட்டமாகவே உள்ளது என்பதைத் தவிர, குறிப்பிடும்படியாக எதுவும் இல்லை.

மக்கள் நலன் சார்ந்த அரசாக இருப்பதைக் கைவிட்டு, டாஸ்மாக் கடைகளின் மூலம் மதுவைக் கொடுத்து, ஏழை எளிய மக்களின் கையில் இருந்து பல்லாயிரம் கோடிகளைப் பிடுங்கிக் கொண்டு, இலவசங்களை அள்ளி இறைத்ததைச் சாதனை என்று கூறுவதை ஏற்க முடியுமா? ஊழல்மயமாகிவிட்ட அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை என்பதே கிடையாது.

மாநிலத்தின் மொத்தக் கடன் 2 லட்சத்து 16 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.01% என்று மதிப்பீடு செய்வது ஏமாற்று வேலை.

கடந்த தேர்தலின்போது ஜெயலலிதா தந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக நிதி அமைச்சர் கூறுவதில் துளியும் உண்மை இல்லை.

கீழ்காணும் வாக்குறுதிகள் என்ன ஆயிற்று? நிதி அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும்.

*வேளாண்மைத் துறையில் இரண்டாவது பசுமைப் புரட்சி நிகழ்த்துவோம்; நெல் விளைச்சலை 8.6 மில்லியன் டன்களில் இருந்து 13.45 மில்லியன் டன்களாகப் பெருக்குவோம் என்று கூறினார்கள். ஆனால், அரசின் புள்ளிவிவரப்படியே நெல் விளைச்சல் 7.1 மில்லியன் டன் என்ற அளவிற்குக் குறைந்து விட்டதே?

* விவசாயிகள், தனிநபர் வருமானம் 2 முதல் 3 மடங்கு அதிகரிக்கப்படும் என்று அளித்த வாக்குறுதி நிறைவேறியதா?

* விவசாய உணவுப் பொருட்கள் பதப்படுத்தும் பூங்காக்கள், குளிர்ப்பதனக் கிடங்குகள், தொழிற்பூங்காக்கள் மாவட்டந்தோறும் அமைக்கப்படும் என்று அளித்த வாக்குறுதி என்ன ஆயிற்று?

* விவசாயிகளைப் பங்குதாரர்களாகக் கொண்ட 6 ஆடை அலங்கார சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும்; 70 இலட்சம் பேருக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று ஜெயலலிதா அளித்த வாக்குறுதி செயல்படுத்தப்பட்டதா?

* 2013 ஆம் ஆண்டுக்குள் 5000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்ற அறிவிப்பு நடைமுறைக்கு வரவே இல்லை. எண்ணூர், உடன்குடி போன்ற மின்உற்பத்தித் திட்டங்களுக்கு ஐந்து ஆண்டுகளாக முட்டுக்கட்டை போட்டதுதான் இந்த அரசின் சாதனையா?

* சென்னை, மதுரை, திருச்சி, கோவை நகரங்களில் மோனோ ரயில் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் ஆட்சிப் பொறுப்பு ஏற்றபோது அறிவித்தாரே, எங்கே மோனோ ரயில்? அதற்காக ஒரு செங்கல்லைக் கூடத் தூக்கி வைக்கவில்லையே? ஐந்து ஆண்டுகள் ஆகியும் சென்னை மெட்ரோ ரயில் பத்து கிலோமீட்டர் தொலைவுக்குத்தான் ஒடுகிறது; கட்டுமான நிறுவனங்கள் ஓடிப் போனதற்கு அரசு போட்ட முட்டுக்கட்டைகள்தான் காரணமா?

* சென்னைத் துறைமுகம் - மதுரவாயல் மேம்பாலக் கட்டுமானத்தை நிறுத்தி, சென்னைத் துறைமுகத்தை முடக்கியதுதான் சாதனையா?

* உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தியதையே சாதனை என்கிற நிதி அமைச்சர், இதுவரை வந்துள்ள அந்நிய மூலதனம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா?

* விலைவாசி ஏற்றத்தைக் கட்டுப்படுத்தவோ, இணையதள, ஊக வணிகத்தைத் தடை செய்யவோ ஜெயலலிதா அரசு எடுத்த நடடிவக்கை என்ன?

* ஒவ்வொரு குடும்பத்திற்கும் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும் என்று கூறிவிட்டு, ஒரு லிட்டர் குடிநீர் 10 ரூபாய்க்கு விற்பனை செய்வதுதான் சாதனையா?

* தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை இருமடங்கு ஆக்குவோம்; வேலை இல்லாத் திண்டாட்டத்தைப் போக்குவோம்” என்றார்; ஆனால், பல்லாயிரக்கணக்கானவர்கள் வேலை இழந்ததுதானே மிச்சம்?

* சிறு, குறு தொழிற்சாலைகள் மற்றும் விசைத்தறி தொழில்களில் ஏற்பட்ட நெருக்கடிகளைத் தீர்க்க அரசு எடுத்த நடவடிக்கை என்ன ?

* ஐந்து ஆண்டுகளாகக் குடும்ப அட்டைகளில் வெள்ளைத் தாளைத்தான் ஒட்டிக் கொண்டு இருக்கின்றீர்கள்; ஒரு அட்டையைக் கூட அச்சிட்டு வழங்கவில்லையே?

* சென்னை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெள்ளத்தின் அரசு முடங்கிப் போய்க் கிடந்ததை உலகம் அறியும். ஆனால் வெள்ள நிவாரணப் பணிகளைச் சிறப்பாகச் செய்ததாக பொய் கூறுவதா?

* தேசிய குற்ற ஆவண ஆய்வு அறிக்கையில் தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள் அதிகரித்து உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் அமைதிப் பூங்காவாகக் காட்சி தருகிறது என்று எப்படி கூறுகிறீர்கள்?

கொங்கு மண்டலத்தின் நீண்ட காலக் கோரிக்கையான அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை நிறைவேற்ற எள்முனை அளவுகூட முயற்சிக்காமல், இனி திட்டப் பணிகள் தொடங்கப்போவதாக அறிவித்து இருப்பது மக்களை ஏமாற்றும் வேலை.

ஐந்து ஆண்டு கால ஆட்சியில் அரசு ஊழியர், ஆசிரியர்களின் கோரிக்கைகள் அலட்சியப்படுத்தப்பட்டன. புதிய திட்டங்கள் எதையும் நிறைவேற்றவில்லை; ஜெயலலிதா அரசு அனைத்துத் துறைகளிலும் படுதோல்வி அடைந்து இருப்பதைத்தான், 2016 - 2017 இடைக்கால நிதிநிலை காட்டுகிறது'' என்று வைகோ தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x