

கோவை மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோயிலில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: 3 மாதங்களுக்கு ஒருமுறை, கோயில் யானைகளுக்கு முழு உடற்பரிசோதனை நடத்தப்படும். 15 நாட்களுக்கு ஒருமுறை மருத்துவர்கள் மூலம் பரிசோதனை நடத்தப்படும். கோயில் யானைகளுக்கான நலவாழ்வு முகாமை பொறுத்தவரை கடந்த காலங்களில் இருந்த நிலைவேறு, தற்போதைய நிலை வேறு. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளகோயில்களில் பராமரிக்கப்படும் யானைகள், அந்தந்த கோயில்களிலேயே புத்துணர்வு பெறவும் ஆரோக்கியமாக இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோயில்களிலேயே யானைகளுக்கு பிரத்தியேக குளியல் தொட்டிகள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
எனவே, தேவை ஏற்பட்டால்மட்டுமே கோயில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் நடத்தப்படும். யானைகள் இல்லாத கோயில்களுக்கு, வீட்டில் வளர்த்து வரும் யானைகளை, உரிமையாளர்கள் தானமாக வழங்கினால், சட்டப்படி ஏற்கப்படும் என்றார்.