

கோவை மருதமலை முருகன் கோயிலில், ‘லிப்ட்’ அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதர், மருதமலை சுப்பிரமணியசுவாமி, பேரூர் பட்டீஸ்வரர் உள்ளிட்ட கோயில்களில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று ஆய்வு மேற்கொண்டார். வடவள்ளியில் மருதமலை கோயில் தேவஸ்தானத்துக்கு சொந்தமான அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியையும் அமைச்சர் பார்வையிட்டார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘மருதமலை முருகன் கோயிலுக்கு அதிகமான படிக்கட்டுகளை கடந்து பக்தர்கள் வர வேண்டியது உள்ளது. இதனால் வயதானவர்கள், மாற்றுத்திறனாளி பக்தர்களின் சிரமத்தை போக்கும் வகையில் ‘லிப்ட்’ அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பக்தர்கள் வாகனங்களை நிறுத்த கூடுதல் இடவசதி ஏற்படுத்தப்படும்.
மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோயிலில் ராஜகோபுரம் கட்டும் பணி, முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு விரைவாக முடிக்கப்படும். கோயில்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணியில் இருப்பவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர்’’ என்றார்.
ஆய்வின்போது, இந்துசமய அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன், மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
திருப்பூரில் ஆய்வு
முன்னதாக, திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி திருமுருகநாதசாமி கோயில், அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில், கருவலூர் மாரியம்மன் கோயில், திருப்பூர் விஸ்வேஸ்வரசாமி கோயில் மற்றும் வீரராகவப் பெருமாள் கோயில்களை அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, மு.பெ.சாமிநாதன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.
அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறும்போது, “கோயில்களில் குடமுழுக்கு பணிகளை விரைவுபடுத்தி வருகிறோம். பதவியேற்று 75 நாட்களில் ஏராளமான கோயில் நிலங்களை மீட்டுள்ளோம். வருமானம் தரக்கூடிய கோயில்கள், வருமானம் இல்லாத கோயில்கள் என்ற நிலையை மாற்றி, அனைத்து கோயில்களிலும் ஒருகால பூஜை நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டப்படி, சிறிய கோயில்களில் நியமிப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கியுள்ளன. இந்த அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் ஆகும்போது, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்துக்கு விடை கிடைக்கும்” என்றார்.
திருப்பூர் ஆட்சியர் சு.வினீத், சட்டப்பேரவை உறுப்பினர் க.செல்வராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.