Last Updated : 22 Feb, 2016 07:35 AM

 

Published : 22 Feb 2016 07:35 AM
Last Updated : 22 Feb 2016 07:35 AM

கிங் மேக்கரா? கிங்கா?- தலைமைக்கு குறிவைக்கிறார் விஜயகாந்த்

சட்டப்பேரவை தேர்தலுக்கான கூட்டணியை அமைக்க காத்திருக் கும் கட்சிகளுக்கு, காஞ்சிபுரத்தில் தேமுதிக நடத்திய அரசியல் திருப்புமுனை மாநாடு மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. கூட்டணி குறித்து மாநாட்டில் விஜயகாந்த் அறிவிப்பார் என்று அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமல்ல, மக்களும் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருந்தனர்.

முந்தைய தேர்தல் மாநாடு களைப் போல அல்லாமல் காஞ்சி புரம் மாநாட்டின் மூலமாக எல்லோ ருக்கும் ஒரு பதிலை விஜயகாந்த் கொடுத்துவிட்டதாகவே தெரிகிறது. குறிப்பாக, ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பாகவும் மாநாடு நடத்தி வந்த விஜயகாந்த், எந்த மாநாட்டிலும் தெளிவான பதிலை கொடுத்தது கிடையாது.

குறிப்பாக, 2011-ல் சேலத்தில் நடந்த தேமுதிக உரிமை மீட்பு மாநாட்டில், ‘கூட்டணி வைக்க லாமா? வேண்டாமா?’ என்று தொண் டர்களிடம் கேட்ட விஜயகாந்த், பின்னர், கூட்டணி பற்றிய முடிவை தாமே எடுப்பதாகவும் தெரிவித்தார். பின்னர் அதிமுக-வுடன் கூட்டணி அமைத்தார்.

அடுத்து, நாடாளுமன்றத் தேர் தலின்போது, உளுந்தூர்பேட்டை யில் ‘ஊழல் எதிர்ப்பு மாநாடு’ நடத்திய விஜயகாந்த், அப்போதும் கூட, தேர்தலில் யாருடன் கூட்டணி’ என்பதை அறிவிக்கவில்லை. பின் னர் அதிமுக, திமுக கூட்டணியைத் தவிர்த்து, திடீரென பாஜக-வுடன் கூட்டணி அமைத்தார்.

இப்போது, சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு காஞ்சிபுரத் தில் அரசியல் திருப்புமுனை மாநாடு நடத்தி, கூட்டணிக்காக தம்மை எதிர்பார்த்துள்ள கட்சிகளுக் கும், வாக்களிக்கக் காத்திருக்கும் மக்களுக்கும் விஜயகாந்த் நேரடி யாக பதில் சொல்லவில்லை.

ஆனால், முந்தைய மாநாடு களைப் போல அல்லாமல், ‘கிங்’ ஆக இருக்கட்டுமா? ‘கிங் மேக்க ராக’ இருக்கட்டுமா? என்று தொண் டர்களிடம் கேட்டார். தொண்டர் கள் ‘கிங்’ ஆக இருக்கட்டும் என்று சொன்னதை பத்திரிகையாளர் களை கவனிக்கச் சொல்லியிருக்கிறார் விஜயகாந்த்.

தேர்தலுக்கு முன்னதாக, தேமுதிக தலைமையை ஏற்கும் கட்கிகளுடன்தான் கூட்டணி என்று சொல்லிவந்தார். அதைத்தான் தற்போது ‘பஞ்ச்’ வசனமாக்கி, ‘கிங்’ ஆக இருப்பதா? ‘கிங் மேக் கராக’ இருப்பதா? என்று கேள்வி யாக்கி இருக்கிறார்.

ஆக, விஜயகாந்த் சொல்வ தெல்லாம், முதலமைச்சர் வேட்பா ளர் நான்தான். அதை ஏற்கும் கட்சி களுடன் கூட்டணிக்குத் தயார். திமுக, பாஜக, மக்கள் நலக்கூட்டணி என தம்மை கூட்டணிக்கு இழுக்கும் கட்சிகள் எல்லோருக்கும் இதுதான் பதில்.

தேமுதிக-வை கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுக்கும் முக்கிய கட்சிகளில், முதல்வர் பதவியைத்தர திமுக தயாராக இல்லை. அங்கு கருணாநிதி, ஸ்டாலின் என்ற 2 பேர் முதல மைச்சர் வேட்பாளர்களாக காட்சி யளிக்கின்றனர்.

பாஜக-வை பொறுத்தவரை மாநில அளவில் போதுமான அளவு வாக்கு வங்கி இல்லை. மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர்கள் எவரும் இல்லை. அப்படிப்பட்ட நிலையிலும், விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்க, பாஜக தயாராக இல்லை. ஆனால், கூட்டணிக்கு மட்டும் விஜயகாந்த் தேவை என்று எதிர்பார்க்கிறார்கள்.

இதேபோல், மக்கள் நலக்கூட் டணியும் நினைக்கிறது. அவர்கள் கூட்டணியில் பெரிய வாக்கு வங்கி கொண்ட கட்சிகள் எவையும் இல்லை என்பதை எவராலும் மறுக்க முடியாது. ஆனால், கூட்டணிக்கு வருமாறு விஜயகாந்த்துக்கு அழைப்பு விடுக்கும் மக்கள் நலக் கூட்டணியினர்கூட, முதலமைச்சர் வேட்பாளராக விஜயகாந்த்தை அறிவிக்க முன்வரவில்லை.

அடுத்து, அதிமுக-வை விமர் சித்த அளவுக்கு திமுக-வை விஜயகாந்த் தொடவே இல்லை. அதேபோல் பாஜக, காங்கிரஸ், மக்கள் நலக்கூட்டணி என பிற கட்சிகளை விஜயகாந்த் மறந்தும் விமர்சிக்கவில்லை. ஆனால், மறக்காமல் விஜயகாந்த் சொன்னது, முதலமைச்சர் வேட்பாளர் நான் தான். கூட்டணிக்கு நீங்கள் தயாரா? என்பதுதான் அது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x